பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரொம்பப் பிடிக்கும். அதிலும் அவருடைய ரத்தக் கண்ணீர் நாடகத்தை நான் மிஸ் பண்ணுவதே கிடையாது. அதிலே ஒரு சீன் வரும். அந்த சீன் எப்பவோ பார்த்தது, இன்னும் என் நினைவிலே அப்படியே இருக்கு. குஷ்டரோகியான பின் காந்தாவால் விரட்டப்பட்டு அவர் வீதிக்கு வருவார். அந்த வீதியிலே ஒரு பக்கம் இந்து கோயில்; அதிலே ஒரு அர்ச்சகர். இன்னொரு பக்கம் மாதா கோயில்; அதிலே ஒரு பாதிரியார். இந்து கோயில் அர்ச்சகர் குஷ்ட ரோகியைக் கண்டதும், ‘மாபாவிகிட்ட வராதேடா, எட்டிப் போடா!'ன்னு விரட்டு வார்; பாதிரியாரோ, “வா தம்பி, வா உன் பாவத்தை மன்னித்து உன்னை ரட்சிக்க எங்கள் இயேசு இருக்கிறார். வா தம்பி, வா’ என்று அன்புடன் குஷ்டரோகியை அழைத்து அடைக்கலம் தருவார். இந்த ஒரு சின்னஞ்சிறு காட்சியில், இந்து மதம் நாளுக்கு நாள் ஏன் ஷீணிக்கிறது, கிறிஸ்துவ மதம் ஏன் நாளுக்கு நாள் வளருகிறது என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லாமல் சொல்லி விடுகிறார் ராதா!--இந்த மாதிரி பல விஷயங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சீன்கள் சில இந்த நாடகத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றையெல்லாம் இங்கே விரிவாக எடுத்துக் கூறும் அளவுக்கு இப்போது எனக்கு நேரமில்லை. இன்றிரவே இங்கிருந்து நான் புறப்பட்டு நாளை சென்னைக்குப்போய், அங்கிருந்து அமெரிக்காவுக்குப் போக வேண்டியவனாயிருக்கிறேன். ஆகவே, இந்த நாடகத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறி என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். இதிலே நாம் பார்த்த விதவையின் துயரம் பிராமணாள் வீட்டிலே மட்டுமில்லே, சூத்திராள் வீட்டிலும் இருக்கு. அதாலே இது எல்லாருக்கும் பொது. எல்லாரும் சேர்ந்து ஒழிக்க வேண்டிய அநீதி, கொடுமை! நான் வரேன், நமஸ்காரம்’னு சொல்லி, அவர் மேடையை விட்டு இறங்கியதுதான் தாமதம், ஆடிட்டோரியத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரே ஆரவாரம்'வாபஸ் வாங்கு, சூத்திராள்னு சொன்னதை வாபஸ் வாங்கு'ன்னு ஒரே கூச்சல், கலாட்டா! சர்மாவுக்கோ மீண்டும் மேடை ஏறி அதை வாபஸ் வாங்கி விட்டுப் போகும் அளவுக்கு நேரமில்லே. பழக்க தோஷம், வாய் தவறி வந்துவிட்டது. நான் வேணும்னா, சூத்திரான்னு