பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

விந்தன்


24. திருவாரூர் சிங்கராயர்

“காந்தியார் அகிம்சாவாதியாயிருந்தாலும் அப்போதிருந்த காங்கிரஸ் தொண்டர்களிலே பலர் அகிம்சாவாதிகளாயில்லே. திராவிடர் கழக மாநாடு எங்கே நடந்தாலும் அந்த மாநாட்டுப் பந்தல்களைக் கொளுத்தறதிலே அவங்க முன்னணியிலே நின்னாங்க, கறுஞ் சட்டைக்காரனைப் பிடிச்சி அடிக்கிற ஆத்திரத்திலே தங்களை மறந்து கறுப்பு அங்கி போட்ட வக்கீலையும் பிடிச்சி அடிச்சிட்டு, “ஐ ஆம் வெரி சாரின்னாங்க. என் நாடகம் எங்கே நடந்தாலும் அதை நடக்கவிடாம தடுக்கிறதுக்காகத் தங்கள் செல்வாக்கை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்தித் தடை உத்தரவு வாங்கினாங்க. இந்த மாதிரி எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சிப் பின் வாங்கியவர்களும் அந்த நாள் திராவிடர் கழகத்திலே உண்டு; அஞ்சாம எதிர்த்து நின்று நினைச்சதை நினைச்சபடி செஞ்சி முடிச்சவங்களும் உண்டு. அவர்களிலே சிலர் இன்னிக்கு என்னை மறந்தாலும் என்னாலே அவர்களை மறக்க முடியல்லே...”

“சொல்லுங்கள்; நீங்கள் சொன்ன பிறகாவது உங்களுடைய நினைவு அவர்களுக்கு வராதா ?”

‘எதுக்கு வரணும்? நீங்க நினைக்கிற நோக்கத்திலே அதை நான் இப்போ உங்ககிட்டே சொல்ல வரல்லே, ஏன்னா, என்னிக்குமே இன்னொருத்தன் கால்லே நிற்கணும்னு நான் நினைச்சதே கிடையாது; இன்னிக்கும் அப்படி நினைக்க மாட்டேன்..."