பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

153


அதிலே மைக் வைச்சித் தஞ்சாவூர் பூராவும் ‘தூக்கு மேடை’ நாடகத்துக்கு விளம்பரம் செய்ய வைச்சேன். முதல் நாள் நாடக வசூலைக் கருணாநிதிக்குக் கொடுத்துடறதா முடிவு செஞ்சிருந்தோம். அதைப் பெரியார் தலைமையிலே நாடகத்தை நடத்திக் கொடுத்தா நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணுச்சி. அப்போ பெரியார் இப்போ இறந்து போனாரே திருச்சி வேதாசலம், அவர் வீட்டிலே தங்கியிருந்தார்...”

“யார் வக்கீல் வேதாசலம்தானே ?”

“அவரேதான். அந்த நாளிலே பெரியார் திருச்சிக்கு வந்தா அவர் வீட்டிலேதான் தங்குவார். அங்கே போய்ப் பெரியாரைப் பார்த்து, அவர் கிட்டே விஷயத்தைச் சொல்லி, அவருக்குச் செளகரியமான ஒரு தேதியைக் கேட்டுக்கிட்டு வரச் சொல்லி சிங்கராயரை அனுப்பினேன். அவர் போய்ச் சொன்னதற்கு, கண்டவனுக்கெல்லாம் நிதி கொடுக்கிறதாவது, அந்த நாடகத்துக்கு நான் தலைமை தாங்கறதாவது? போய்யா, போ ன்னு பெரியார் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். விஷயம் என்னன்னா, கருணாநிதியை அப்போ பெரியாருக்குக் கொஞ்சம் பிடிக்காது. காரணம் வேறே ஒண்ணுமில்லே, எல்லாப் பெரிய மனிதர்களுக்கும் ஏதாவது ஒண்ணிலே ‘வீக்னஸ்’ இருக்குமே, அந்த வீக்னஸ் அவருக்கும் இருந்ததுதான் காரணம். மேடைப் பேச்சிலே சில சமயம் எல்லாரையும் மிஞ்சிப் பேசி, அப்போதே பொது மக்களிடம் ‘அப்ளாஸ்’ வாங்கிவிடும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு உண்டு. அது அவருக்குப் பிடிக்காது. இருந்தாலும் அதுக்காக அந்தச் சமயம் அவரை விட்டுவிடக் கூடாதுன்னு நானே திருச்சிக்குப் போனேன். போனதும் நூறு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதற்குப் பின் விஷயத்தைச் சொல்லித் தேதியைக் கேட்டேன். சக்ஸஸ் உடனே தேதி கிடைத்துவிட்டது. அவர் குறிப்பிட்ட தேதியில், அவருடைய தலைமையில் ‘துக்கு மேடை’ நாடகம் நடந்தது. வெற்றி எனக்கு மட்டுமா ? இல்லே, கருணாநிதிக்கும்தான்!"