பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

155


மனுஷனைக் கண்டு பயந்தா? அதெல்லாம் ஒண்னுமில்லே, துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லா சாமியும் அப்படியிருக்கு'ன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ‘ஆயுதம் ஏந்திய சாமி'யாவே இருந்துகிட்டிருந்தேன்...”

“சுவாமிகள் ஏதாவது தப்புத் தண்டா செய்தால்கூட அதைத் ‘திருவிளையாடல்’ என்று பக்தர்கள் சொல்லிவிடுவார்கள்; நீங்கள் தப்புத் தண்டா செய்தால்...”

“நானாக எப்பவுமே எத்தத் தப்புத் தண்டாவுக்கும்: போக மாட்டேன்; எல்லாம் தானாகத்தான் வந்து சேரும்...”

“அது உங்கள் ஜாதக விசேஷம் போலிருக்கிறது ?”

“இல்லே, நாடக விசேஷம்!”

“சரி, பிறகு....?”

“மலைக்கோட்டை மணின்னு ஒரு நண்பர். அவர் திருச்சி தேவர் ஹாலிலே என் நாடகங்கள் சிலவற்றை நடத்தினார். அந்தச் சமயத்திலேதான் குன்றக்குடி அடிகளார் எனக்குக் ‘கலைத் தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கினார்...”

“கலைத் தென்றல் எம்.ஆர்.ராதா என்று சொல்பவர்களை விட நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று சொல்பவர்கள்தானே அதிகமாயிருக்கிறார்கள் ? அந்தப் பட்டத்தை யார் கொடுத்தது?”

“என் அருமை நண்பர், அஞ்சா நெஞ்சர் அழகிரிசாமி. திராவிடர் கழகத்துக்காகத் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் உண்மையாகவே தத்தம் செய்த உத்தமர் அவர்.”

“அவருடைய குடும்பத்துக்கு யாரும் எந்த உதவியும்...”

“கேட்காமலேயே உதவி செய்ய வேண்டிய குடும்பம் அது. இப்போ உள்ள நிலவரத்தைப் பார்த்தா கேட்டால்தான் ஏதாவது செய்வார்கள் போலிருக்கிறது...!”

“வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும், இல்லையா?"