பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

விந்தன்


.முதலியார், கந்தசாமி முதலியார் மாதிரி படிச்சவங்க சிலரும், கலையிலே பிரியமுள்ள பிராமணர்களில் சிலரும் மெல்ல மெல்ல நாடக மேடைக்கு வந்து கிட்டிருந்தாங்க. அவங்க வந்தப்புறந்தான் ‘கூத்துங்கிறது ‘நாடக மாச்சி; ‘கூத்தாடி'ங்கிறவன் நடிகன், கலைஞன்னு ஆனான். ‘நாடக’ மும் ஒரு ‘கலை'ன்னு ஆச்சி...”

“இதிலிருந்து படித்தவர்களும் பிராமணர்களும்தான் எதையும் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்த முடியும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?”

“சந்தேகமில்லாமல். ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதகலை இன்னிக்கு அவங்களாலே புனிதமான கலையாயிடிச்சே! அந்தக் கலைக்காக அவங்க வீட்டுப் பொண்ணுங்களையே அவங்க அர்ப்பணம் ’செய்யறாங்களே ?”

“அப்படிச் செய்யாவிட்டால் சமூகத்தில் அந்தக் கலைக்கு இன்று கிடைத்துள்ள கெளரவம் கிடைத்திருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?”

“ஒரு நாளும் கிடைத்திருக்காது. எப்போப் பார்த்தாலும் சமூகச் சீர்திருத்தத்தைப் பற்றியே பேசிக்கிட்டிருக்கும் பெரியார் தலைமையிலே கூட இல்லே இப்போ பரத நாட்டிய அரங்கேற்றம் நடக்குது ?”

“ஆமாம்; மயிலையிலே நடந்த அந்த அரங்கேற்றத்தை நானும் பார்த்தேன். எல்லாமே ‘வெங்காயமாகத் தெரியும் அவருக்கு பரத கலை மட்டும் வெங்காயமாகத் தெரியாமல் போனது எனக்குக் கூட ஆச்சரியமாய்த்தான் இருந்தது!”

“வெங்காயம்னா உரிக்க உரிக்க ஒண்ணுமே இல்லாமப் போகும். பரத கலை அப்படியா? எவன் எந்தக் கண்ணாலும் அதைப் பார்த்து ரசிக்கலாமே!”

“உங்கள் பிரேமாவுக்கும் அந்தக் கலை தெரியுமா?”

“தெரியும்."