பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

169


“இல்லேன்னா ஏன் வராம இருந்திருக்கப் போறார்? இது எனக்குப் பிடிக்கல்லே. ‘என்னதான் கெட்டிக் காரராயிருந்தாலும் ஒரு மாநாட்டுக்குத் தலைவர் வராம இருக்கலாம்; தளபதி வராம இருக்கலாமா?ன்னு நினைச்சேன். அப்போ பெரியார் சொன்ன ‘கெட்டிக்காரன் கதை ஒண்ணு என் நினைவுக்கு வந்தது.”

“அது என்ன கதை?”

“நீங்ககூடக் கேட்டிருப்பீங்களே, அவர் அடிக்கடி சொல்வார் - ‘எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்கதான் வேணும்'னு. ஒரு நாள் அவர் அப்படிச் சொன்னப்போ, ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?'ன்னு அவரை ஒருத்தர் கேட்டார். அதுக்குப் பெரியார் சொன்னார்: ‘எனக்குப் பா.வே.மாணிக்க நாயக்கர்னு ஒரு நண்பர்; என்ஜினியர். அவரை வைச்சி நான் ஒரு சமயம் ஈரோடிலே வீடு ஒண்ணு கட்டினேன். சுற்றுச் சுவரெல்லாம் எழுப்பியாச்சு. இனிமே மரம் வந்துதான் மேலே வேலையை ஆரம்பிக்கனும், நாளைக்கு நீங்க மரம் வாங்கி வையுங்க, நான் வரேன்னு: சொல்லிட்டு அவர் வீட்டுக்குப் போயிட்டார். மறுநாள் வந்து, “என்ன, மரம் வாங்க ஆள் போயாச்சா ?'ன்னார். ‘போயாச்சு, நல்ல கெட்டிக்காரத் தச்சனுங்களர்ப் பார்த்து ரெண்டு பேரை அனுப்பி வைச்சிருக்கேன்னேன். ‘கெட்டிக்காரனுங்களையா அனுப்பினிங்க? அப்போ மரம் வந்து சேராது'ன்னார். ‘ஏன்?'னு: கேட்டேன். அதை நான் ஏன் சொல்லனும், நீங்களாகவே தெரிஞ்சிக்குவீங்கன்னார். . ‘சரி'ன்னு அந்தக் கெட்டிக்காரனுங்க வர வரையிலே காத்திருந்தோம். காலையிலே போன அவனுங்க, சாயங்காலம் மூணு மணிக்கு மேலே வந்தானுங்க. வந்தவனுங்க மரத்தோடும் வரல்லே, வெறுங்கையோடு வந்து நின்னானுங்க. ‘எங்கே மரம்'னேன். ‘இந்தக் கொட்டாப்புளி பிடிக்கத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா பொறுக்கி எடுத்தா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்'னான் ஒருத்தன்;