பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

89


பேரைப் பிடிச்சோம். ஒருத்தர் கொஞ்சம் கை கொடுத்தார்; இன்னொருத்தர் கை கொடுக்கிறேன்னு சொல்லிக் கையை விட்டுட்டார். அது மாடர்ன் தியேட்டர்ஸ் கட்டி முடிக்கப்பட்டிருந்த சமயம். அங்கேயே ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம்...”

“படத்தின் பேரைச் சொல்லவில்லையே ?” “பம்பாய் மெயில்.” “மெயில் என்றால் ஒரு வேகம் இருந்திருக்குமே?” “பெயரில்தான் அது மெயிலாயிருந்தது; படப்பிடிப்பில் பாசஞ்சராயிருந்தது!” -.

“அதனாலென்ன, எப்படியும் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்குமே!”

“சேர்ந்திடுச்சி, சேர்ந்திடுச்சி! ஆனா, அதோட எங்களுக்குச் சொந்தமாப் படம் எடுக்கிற ஆசையே போயிடுச்சி!”

“சட்டி சுட்டா கையை நாமா விடுகிறோம் ? அதுதான் தானாகவே விட்டுவிடுகிறதே, அப்புறம் ?”

“மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா கொஞ்ச நாள் இருந்தேன். அங்கேதான், சந்தனத்தேவன், ‘சத்தியராணி எல்லாம் எடுத்தாங்க, அங்கேயும் ஒரு சங்கடம் வந்து சேர்ந்தது...!”

“அது என்ன சங்கட்ம்...”

“பொள்ளாச்சி ஞானம்னு ஒரு பொண்ணு...”

“அது யார் அந்தப் பொள்ளாச்சி ஞானம் ?”

“அதுதான் பி.எஸ். ஞானம்னு சொல்லுவாங்களே, அது. அந்தப் பொண்ணு அப்போ மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலே நடிச்சிக்கிட்டிருந்தது. அதுக்கு அங்கே ஏகக் கட்டுக் காவல் ... யாராவது ஒரு வார்த்தை அந்தப் பொண்ணுகிட்டே பேசினாப் போதும், ‘அங்கே உனக்கென்ன பேச்சு? இங்கே உனக்கென்ன பேச்சு?ன்னு சீறி விழுவாங்க...'