பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

விந்தன்


அட, கடவுளே இந்தப் பெண்களிடம் அப்படி என்னதான் இருக்குமோ, தெரியவில்லையே?”

“என்ன இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சித்தான் இருக்கு. ஆனாலும் சிலருக்கு அதிலே ஏதோ ஒரு தீராத மயக்கம். அந்த மயக்கத்தைத் தெளியவைக்கணும்னு நான் நெனச்சேன். அதுக்கு என்ன வழி ?ன்னு யோசிச்சப்போ, ‘வள்ளுவன் வழி'தான் சரின்னு பட்டது...”

“அது என்ன வள்ளுவன் வழி ?”

“வாயாலே ஏன் பேசறே, கண்ணே போதுமே காரியத்தை முடிக்கன்னு அவன் சொல்லல்லையா?... அட, எங்கப்பா! இந்தக் காதல் விவகாரத்திலே தாடியும் ஜடாமுடியும் வைச்சிக்கிட்டு அவன் போட்டிருக்கிற போடு டைட் பாண்ட் டி ஷர்ட் பயலுங்ககூடப் போடமுடியாது போல இருக்கே ... அவள் வழியையே நானும் ‘பாலோ'பண்ணேன்... அதோடே நாடகத்திலும் அந்தப் பொண்ணை நடிக்கவிட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சி.... கண்ணாலேயே காரியத்தை ஒரு தினுசா முடிச்சி, பொம்மியை மதுரை வீரன் சிறை எடுத்தாப்போல, ஒரு நாள் ராத்திரிக்கு ராத்திரியா ஞானத்தை மாடர்ன் தியேட்டர்ஸிலேயிருந்து சிறை எடுத்து வந்து பொள்ளாச்சியிலே சேர்த்தேன். அதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு யோசனை பண்ணிக்கிட்டிருந்தப்போ யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை வந்தார். ‘என்ன சங்கதி ?'ன்னேன். ‘ஒரு ரவுடிப் பய காண்ட்ராக்டர்கிட்டே மாட்டிக்கிட்டேன். அவன் பேசிய பணத்தையும் ஒழுங்காகக் கொடுக்கமாட்டேங்கிறான், கம்பெனியையும் வேறே ஊருக்குப் போக விட மாட்டேங்கிறான்னார். ‘ஏன், உங்க சமாதான வழியைக் கையாண்டு பார்க்கிறதுதானே ?'ன்னேன். ‘அந்த வழியெல்லாம் இப்போ எங்கே செல்லுது? உலகம் முழுக்க சமாதானம், சமாதானம்னு சொல்லிக்கிட்டே சண்டை போடறதுதானே சமாதானமா இருந்துகிட்டிருக்கு! ‘ன்னார். ‘வந்தீங்களா வழிக்கு, வாங்க போவோம்’னு அவரோடே புறப்பட்டேன்."