பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. வரலாறு

பிறந்த நாள் விழாக் கொண்டாடுகின்ற இந்தக் காலத்தில், பேசவேண்டிய பேச்சு அவருடைய வரலாறு ஒன்றுதான். வேறு எதையும் பேசுவதற்கு இந்த மேடையில் இடமில்லை. நாயகம் அவர்களுடைய வரலாற்றைக் கூறுவதற்கு ஒரு நிமிடம் போதும். இது நாள் வரை பேச்சாளர்கள் பலர் பேசியதையும், இப்போது இங்கு பேசப்பெற்ற நல்லறிஞர்கள் பேசிய பேச்சுகளையுமெல்லாம் தொகுத்தால், அவருடைய வரலாறு ஒரு நிமிடத்தில் முடிந்து விடும்.

நாம் போற்றுகிற எம்பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள், 1446 ஆண்டுகளுக்கு முன்னே, நாம் வாழுகின்ற இதே ஆசியாக் கண்டத்தின் மேலைக் கோடியில் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த நகரம், அவரைப் பெற்றதனால் பெயரும் புகழும் பெற்ற மக்கா நகரம். அவர்கள் பிறந்து 63 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார்கள். பிறந்த ஆறு ஆண்டுக்குள்ளாகவே பெற்றோர் இருவரையும் இழந்தார்கள். பெரிய தந்தையாராலே வளர்க்கப் பெற்றார்கள். முன்னைய 40 ஆண்டுகள் குடும்பத்திற்காக, வணிகத்திற்காக என்றே கழிந்தன. அக்காலத்திலும் கூட, சாதாரண மக்களிடத்தில் காணப் பெறாத அரிய செயல்கள், அவர்களிடத்திலே காணப் பெற்றன. பின்னைய 23 ஆண்டுகள், உலக மக்களுக்காக என்றே வாழ்ந்தார்கள். இந்த 63 ஆண்டுகளிலே, அவர்கள் செயற்கரும் செயல்களைச் செய்து சீர்திருத்தத்தைப் புகுத்தி, தம் காலத்திலேயே வெற்றியும் பெற்றார்கள். பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து புனிதத் திருமறையை நமக்கு இறக்கித் தந்தார்கள்; நம்மைவிட்டு மறைந்தார்கள்; என்பதுதான் அவர்