பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

13

சீர்த்திருத்தினார்கள் என்றால், இது எந்த மக்களாலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு அருஞ்செயலும், பெருஞ்செயலும் ஆகும் எனக் கொள்ள வேண்டும். இன்றைய அரேபிய மக்கள் உலகத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். விஞ்ஞானிகளிலே மிகச் சிறந்த விஞ்ஞானிகள் இன்றைய அரேபியர்கள். அவ்வளவு இருள் கவ்விய அந்தச் சமூகம் இன்றைக்கு ஒளி வீசக் கூடிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால், இந்த நல்ல நாளில் அவர்கள் செய்த தொண்டு எவ்வளவு பெரியது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமிய மாணிக்கம்

இதனால்தான் ஒரு மேலை நாட்டு அறிஞன் சொன்னான்! “உலகம் முழுவதும் ஒளி வீசக் கூடிய ஒரு இஸ்லாமிய மாணிக்கம் அரேபிய நாட்டில் கண்டெடுக்கப் பெற்றது” என்று. இந்தச் சொற்றொடருக்கு எவ்வளவு பொருள்! நாயகம் ஒரு மாணிக்கம் என்றும், அது இஸ்லாமிய மாணிக்கம் என்றும், அவருடைய போதனை உலகம் முழுதும் ஒளி வீசுகிறது என்றும், அது கண்டெடுக்கப்பட்ட நாடு அரேபிய நாடு என்றும் அவன் வர்ணித்தான். ஆகவே, இதை இஸ்லாமிய மக்கள் உள்ளத்தே வைத்து நாள் தோறும் பெருமைப்பட வேண்டும்.

இஸ்லாம்

நாயகம் அவர்கள்தாம் இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்தார்கள் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். அது தவறு. இஸ்லாம் என்றும் உள்ளது. அதை நாயகம் அவர்கள் சீர் திருத்தினார்கள். அவ்வளவுதான். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, முத்தி என்று பொருள்.