பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நபிகள் நாயகம்

நமது உறுப்புகள் எல்லாம் அது இல்லாமலே ஓடுகின்றன. ஆக, இத்தகைய குடல்களுக்கும், உறுப்புகளுக்கும் வரையறுக்கப்பட்ட சில காலத்திலாவது ஓய்வு இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். நீண்ட நாள் உயிர் வாழ உடல் நலத்திற்குத் துணை செய்கின்ற ஒன்று இது.

மற்றொன்று, சமயத் தொடர்பானது. குடல் சுத்தமாகும் போது, உடல் சுத்தமாகிறது. உடல் சுத்தமாகும் போது, எண்ணம் சுத்தமாகிறது. எண்ணம் சுத்தமாகும் போது, ஆன்மா சுத்தமாகிறது. சுத்தமடைந்த ஆன்மாதான், ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமாகிறது என்பதைப் பின்னிப் படிப்படியாக அமைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நோன்பிலிருந்து இறையருள் பெறுவது வரை. இது அவர்கள் புகுத்தியது.

ஜக்காத்

நான்காவது ஜக்காத். நான் எத்தனையோ மொழி பெயர்ப்பாளர்களிடம் இந்த ஜக்காத் என்ற சொல்லுக்குப் பொருள் யாது எனக் கேட்டேன். சரியான பொருள் கிடைக்கவில்லை. வடமொழியில் சொன்னால், தர்மம் என்கிறார்கள். நான் தமிழில் மொழி பெயர்த்தேன் கொடை என்று. ஒன்றும் பொருந்தவில்லை. இந்த ஒரு அரேபியச் சொல்லுக்கு, எந்த மொழியிலும் சரியான சொல் இல்லை. சொல்லவும் முடியவில்லை. ஏதேனும் சொல்ல வேண்டும். ஏழை மக்களுக்குப் பணக்காரன் கொடுத்துத் தீரவேண்டிய ஒரு கட்டாய வரி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

தன் சொத்தில் 40ல் ஒரு பங்கு உளமகிழ்ந்து வழங்குகின்ற இது பரிசுத்தத் தன்மை வாய்ந்தது.