பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நபிகள் நாயகம்

இல்லை. அப்கன் அரசர் அமீர், ஐதராபாத் நிஜாம், துருக்கித் தலைவர் இனூனு, ஈரான் மன்னர், அரேபிய அரசர் யாராக இருந்தால்தான் என்ன? வேலைக்காரன் முன் சென்று முன் வரிசையில் இருந்தால், இந்த மன்னர்கள் அவனுக்கு அடுத்த வரிசையில் இருந்துதான் ஆண்டவனைத் தொழ வேண்டும். இன்னும் ஒரு படி தாண்டிச் சொல்கிறேன், தன் வேலைக்காரனுடைய காலடியில்தான் மன்னாதி மன்னர்கள் தங்கள் முடியை வைத்து ஆண்டவணைத் தொழ வேண்டும். [கை தட்டல்] அவ்வளவு தூரம் சமத்தவம் வற்புறுத்தப் பெற்றிருக்கிறது.

இம்மாதிரியான காட்சியைப் பிற சமயத்தினரிடத்தில் காண இயலாது. என்னுடைய நண்பர் கான் பகதூர் பி. கலிபுல்லா சாயபு அவர்கள் நபிகள் நாயகம் விழா ஒன்றில் பேசும் பொழுது, இஸ்லாத்திலே சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எனக்குச் சிறிது வருத்தம் உண்டாயிற்று. நான் அவர்கள் பேசிய பின்னால் பேசினேன். நான் சொன்னேன்: 'அவர்கள் பேசியதை மறுக்கிறேன். இஸ்லாத்திலேதான் சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறதா? மற்ற மதங்களிலே சமத்துவம் சொல்லப்படவில்லையா? அவர்கள் சொன்னது தவறு. மறுக்கிறேன்' என்றேன். அவர் என்னை வியப்போடு பார்த்தார். 'ஆமாம்! நீங்கள் சொன்னது பெரிய தவறு' என்றேன். 'என்ன?' என்றார். "இஸ்லாத்தில் மட்டும் சமத்துவம் சொல்லப்படவில்லை; எல்லாச் சமயங்களிலும் சமத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது, ஆனால், இஸ்லாத்தில் மட்டும்தான் 'சமத்துவம் செய்யப்பட்டிருக்கிறது’" என்றேன். அதுதான் உண்மை. அம்மாதிரி பிற சமயங்களில் செய்யப்படாமல், சொல்லப்பட்டு மட்டும் இருக்கிறது. ஆகவே, இனிமேல் சொல்லும் போது