பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நபிகள் நாயகம்

சுலைமான்’ அவர்கள் தாம். திருக்குர்ரானையும் பைபிளையும் படிப்பவர்களுக்கு இரண்டிலும் காணப்படுகின்ற பெயர்கள் ஒரே பெயராகத் தோன்றும். திருக்குர்ரானில் யாக்கூப், தாவுத், இப்ரகீம், மூசா, சிக்கந்தர், சுலைமான் என்று வரும் பெயர்களெல்லாம் பைபிளில் ஜேகப், டேவிட், ஆப்ரகாம், மோசே, அலெக்சாந்தர், சாலமோன் என வரும்,

சாலமோன் மிகப் பெரிய ஞானி, அவருக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியது. "நல்லவன் வறுமை வாய்ப்பட்டுத் துன்பப்படுகிறானே ஏன்! கெட்டவன் செல்வம் படைத்து மகிழ்ச்சியோடு வாழ்கிறானே ஏன்? செல்வம் படைத்த பலருக்குக் குழந்தை இல்லையே ஏன்? அவர்கள் விரும்பியும் வேண்டியும் குழந்தை பிறக்காதது ஏன்? வறுமை வாய்ப்பட்ட ஏழை மக்களுக்கு அதிகப் பிள்ளைகள் பிறந்திருப்பதேன்? அவர்கள் விரும்பா விட்டாலும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றனவே! அது ஏன்? இது கடவுள் செயலா? சாத்தான் செயலா? கடவுள் செயல் என்றால் அது நியாயமாகுமா? சாத்தான் செயல் என்றால் கடவுளின சக்திக்கு மீறியும் சில செயல்கள் நடக்க முடியுமா?" என்பதே அவரது ஐயம்.

இதை அவர்கள் எண்ணி எண்ணிப் பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. பல நாள் சிந்தித்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. வீட்டிலிருந்தும், வீதியிலிருந்தும் நடந்தும், கிடந்தும் ஆலோசித்துப் பார்த்தார்கள். ஒன்றும் தோன்றவில்லை.

கடைசியாகக் கடற்கரைக்குச் சென்று, காலையிலிருந்து மாலை வரை கடல் அலை நீர் காலிற் படும்படிக் கரையோரமே நடந்து உலாவி யோசித்துப் பார்த்தார்கள். விடை கிடைக்கவில்லை.