பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நபிகள் நாயகம்

நோக்கத்தைத் தெரிவித்தார். செல்வர், "எவ்வளவு ரூபாயில் பள்ளிவாசல் கட்டப் போகிறீர்கள்" என்று கேட்டார். அதற்குப் பெரியவர், "அதைக் கட்டி முடிப்பதற்குப் பத்தாயிரம் ரூபாய் ஆகும். நீங்கள் ஐயாயிரம் கொடுத்தால், வேறு பலரிடம் ஐயாயிரம் வாங்கி, விரைவில் கட்டி முடிக்க உதவியாக இருக்கும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்குச் செல்வர், "இவ்வளவு காலம் உங்கள் ஊரில், பள்ளிவாசல் இல்லாமல் இருந்ததே தவறு. இன்னும் பலரிடஞ் சென்று காலந் தாழ்ந்த வேண்டாம். நானே பத்தாயிரமும் தருகிறேன். இதற்கு உதவாமல், பணம் என்னிடம் எதற்காக இருக்கிறது?" என்று கூறி, அள்ளிக் கொடுத்தனுப்பினார். பெரியவருக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. மனக்குழப்பத்தோடு, நாயகம் அவர்களிடம் வந்து, "பத்துப் பருப்புச் சிந்தியதற்காகவும், பத்துச் சொட்டு எண்ணெய் சிதறியதற்காகவும் தன் வேலைக்காரர்களைச் சவுக்கடியால் அடித்துத் துன்புறுத்தும் இவன், பள்ளிவாசல் கட்ட ஐயாயிரங் கேட்ட பொழுது, பத்தாயிரங் கொடுத்தானே இதற்கு என்ன காரணம்?" என வினவினார். அதற்கு நாயகம் அவர்கள், "கருமித் தனம் வேறு; சிக்கனம் வேறு. அவன் கருமியல்ல; சிக்கனத்தைக் கையாள்பவன். அவன் அப்படியெல்லாம் பொருள்களைப் பாழாக்காமல் சேர்த்து வைத்திருந்ததனால்தான், அப்பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்படுகிறது" எனக் கூறினார். நாயகம் அவர்களுடைய இந்த வாக்கு நமக்குக் கருமித் தனத்திற்கும், சிக்கனத்திற்கும் உள்ள இடைவெளியை நன்கு காட்டுகிறது.

காய்கறியிலும்

நாயகம் அவர்களுடைய சிக்கனக் கொள்கை ஏழைக் குடிசைகளில் மட்டும் அல்லாமல், ஆட்சித் தலைவர்களின்