பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

நபிகள் நாயகம்

காரர்களுக்கும் வேண்டிய ஆடைகளையும், உணவையும், தண்ணீரையும் ஏற்றும்படி கட்டளையிட்டான். புறப்படும்போது, அதையும் தடுத்துவிட்டு, ஒரு ஒட்டகத்தில் மட்டும் உணவும் நீரும் ஏற்றிக் கொண்டு ஒட்டகக்காரனோடு புறப்பட்டு விட்டான். சிறிது தூரம் சென்றதும், அந்த ஒட்டகம் இருவரையும் சுமந்து, இருவரது சுமையையும் சுமந்து செல்வதை மன்னன் கண்டு மனம் வருந்தி, ஒட்டகத்தின் சுமையைக் குறைக்க எண்ணினான். இறுதியாக அவன் திட்டம் கையாளப்பட்டது. அது, ஒருவர் ஒட்டகத்தின் மேல் இருப்பது, மற்றவர் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நடத்திச் செல்வது. ஒரு மைல் தூரம் சென்ற பிறகு, இருவரும் தங்கள் வேலையை மாற்றிக் கொள்வது என்பது. பல மைல்கள் தூரம் நடந்து சென்று, இறுதியாக, அந்த நாட்டிற்குள் நுழையும் போது, ஒட்டகக்காரன் ஒட்டகத்தின் மேல் இருக்க, மன்னன் தன் கையால் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். பொக்கிஷத்தின் சாவியைக் கொடுக்க அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள், ஒட்டகத்தின் மேலிருந்தவரையும், ஒட்டகத்தைப் பிடித்து வந்தவரையும் மாறி மாறி உற்றுப் பார்த்து, "எந்த மன்னன், ஒட்டகக்காரனை ஒட்டகத்தின் மேல் வைத்துத் தான் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நடந்து, இந்த ஊருக்குள் நுழைகிறானோ, அந்த மன்னனிடம் இந்தச் சாவியைச் சேர்ப்பியுங்கள் என்று எங்களுக்குக் கட்டளை பிறந்திருக்கிறது" என்று கூறி, வியப்போடும் மகிழ்வோடும் ஒட்டகத்தைப் பிடித்து நடந்து வந்த மன்னனிடம் பாலஸ்தீன் நாட்டு மக்கள் சாவியைச் சேர்ப்பித்தார்கள். எப்படி? நாயகம் அவர்களின் சிக்கனக் கொள்கை, அரண்மனைகளிலும் மன்னர்களிடத்தும் பரவியிருந்தது என்பது!