பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

47

தான் முடிந்தது. இன்றைக்குக் காலையிலிருந்து முயன்றேன். என்னால் விட முடிந்தது. சர்க்கரையே சாப்பிடவில்லை. அதனாலே நான் அறிந்தேன். சர்க்கரை சாப்பிடுகிறதை விட முடியும் என்று. அதன் பிறகுதான் பையனுக்கு என்னால் சொல்ல முடிந்தது" என்றார்கள் [கை தட்டல்]. இது, நம் உள்ளத்தைத் தொடுகிறது. தொட்டு என்ன பயன்? நம் நாட்டிலுள்ள பேச்சாளர்களின் உள்ளத்தைத் தொட வேண்டும். எண்ணங்களை நாம் கோடிக்கணக்கில் எண்ணுகிறோம். எழுத்துகளை இலட்சக் கணக்கில் எழுதுகிறோம். பேச்சுகளை ஆயிரக் கணக்கில் பேசுகிறோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் கொட்டுகிறோம். திட்டங்களைப் பத்துக் கணக்கில் வகுக்கிறோம். ஆனால், செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்கிற ஆற்றல் நமக்கு இல்லை. நாயகம் அவர்களிடத்தில் இருந்தது. எதை அவர்கள் சொல்லுகிறார்களோ அதையே அவர்கள் செய்வார்கள், செய்யக் கூடியதையே சொல்லுவார்கள். மக்களால் செய்ய முடியாத எதையும், அவர்கள் ஒரு நாளும் போதித்ததில்லை. அதுதான் அவர்களிடமுள்ள ஒரு பெருஞ் சிறப்பு. அதனாலேயே அவர்களிடம் எனக்குப் பற்று அதிகம்.

வீரம்

எம்பெருமானார் அடிக்கடி 'அநீதியை எதிர்த்தும் போரிடுங்கள்' எனக் கூறுவார்கள். போரிட்டுக் கொண்டே கூறுவார்கள்.

ஹஜ்ரத் அலி அவர்கள் கூறியிருக்கிறார்கள். 'பெரும் போர் நடக்கும் பொழுதெல்லாம், அண்ணலார் அவர்களின் முதுகுப்புறத்தில்தான் நாங்கள் நின்று போராடுவோம்' என்று.