பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82



ஐந்து வேளைத் தொழுகைகளையும் பெருமானார் அவர்கள், அந்தப் பள்ளி வாசலிலேயே நடத்தி வந்தார்கள்.

அங்கேயே மக்களுக்கு அறிவுரைகளும் கூறி வந்தார்கள்.


62. மதீன நகர நிலைமை

மதீனா நகரம், முன்னர் யத்ரிப் என்னும் பெயரால் வழங்கி வந்தது.

பெருமானார் அவர்கள் அந்த நகரத்துக்கு வந்து தங்கியது முதல், அதன் பெயர் மதீனத்துன் நபி (தீர்க்கதரிசியின் நகரம்) என்று ஏற்பட்டு, நாளடைவில் மதீனா என்று வழங்கலாயிற்று.

வெகு காலத்துக்கு முன்னர், அந்த நகரத்தில் யூதர்கள் வந்து குடியேறி இருந்தனர். நாளடைவில் அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்தது. ஆகையால், சுற்றுப்புறங்களில் எல்லாம் அவர்கள் குடியேறலானார்கள். சிறிய கோட்டைகளைக் கட்டிக் கொண்டு நிலையாக அங்கேயே இருந்து வந்தனர்.

எனினும், யத்ரிப் என்று வழங்கப்பட்ட மதீனாவில் ஒளஸ், கஸ்ரஜ் என்ற இரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே அவர்களில் பெரும்பாலோர். அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, யூதர்களின் ஆட்சியும் செல்வாக்கும் மிகுதியாயிருந்தன. அவர்களிடமிருந்த செல்வத்துக்கு அளவே இல்லை. இருபது கிளைகள் வரையிலும் பெருகி, அவர்களின் சந்ததியினர் சுற்றுப்புறங்களிலும், தொலைவான இடங்கள் வரையிலும் குடியேறி இருந்தார்கள்.

அன்சாரிகளின் முன்னோர்கள் இங்கே குடியேறிய சில நாட்கள் வரை ஒதுங்கியே இருந்து வந்தனர். இறுதியில் யூதர்களின் செல்வாக்கைக் கண்டு அவர்களோடு நட்புறவோடு இருப்பதாக உடன்படிக்கை செய்து கொண்டனர். ஆனால், நாளடைவில் அன்சாரிகளின் குடும்பங்கள் பெருகி, செல்வாக்கும் அதிகரித்து வரவே, தங்களுக்கு அதனால் தீங்கு நேரிடும் என்று கருதி, சில நாட்களுக்குப் பிறகு யூதர்கள் உடன்படிக்கையை ரத்து செய்து விட்டார்கள். -