பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83



யூதர்களின் தலைவனான பித்யூன் என்பவன் ஏற்படுத்திய இழிவான ஒரு பழக்கத்தினால், மாலிக் இப்னு அஜ்லான் தம் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காக, அவனைக் கொன்று விட்டு, ஸிரியாவுக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து, அந்நாட்டு அரசருடைய உதவியினால், ஒரு பெரும்படையுடன் வந்து யூதர்களைக் கீழ் அடக்கினார். அதிலிருந்து யூதர்களின் செல்வாக்குத் தேயலாயிற்று.

ஒளஸ், கஸ்ரஜ் என்னும் அன்சாரிக் குடும்பத்தினரிடையே சில நாட்களுக்குப் பிறகு, அரபு நாட்டு வழக்கப்படி சில்லரைச் சச்சரவுகள் உண்டாகின. பிறகு பெரிய சண்டைகளாய் மூண்டன. ஓய்வின்றி, சண்டை வெகு காலம் வரை நீடித்தது. அவற்றில் இறுதியாக நடை பெற்ற புஆது என்னும் சண்டை மிக உக்கிரமமாக நடந்தது. அதனால், இரண்டு குடும்பத்தினரிடையே இருந்த பிரமுகர்கள் பெரும்பாலும் மாண்டு விட்டனர். எனவே அவர்கள் மிகவும் நலிவடைந்து விட்டனர்.

அன்சாரிகள் இஸ்லாத்தில் சேருவதற்கு முன், விக்கிரக ஆராதனைக்காரர்களாக இருந்தனர்.

அன்சாரிகள் என்றால், உதவி செய்பவர்கள் என்று பொருள். பெருமானார் அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உதவி செய்தமையால் அன்சாரி என்று அழைக்கப்படுகின்றனர். [1]


63. தொழுகைக்கு அழைத்தல்

இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல்.

எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. அவ்வாறு கூடிச் செய்யும் வணக்கத்துக்கு, மக்களை எல்லாம் அழைப்பதற்கு எவ்வித ஒழுங்கும் ஏற்படுத்தப் படாமல் இருந்து வந்தது.


  1. குறிப்பு:-மதினா நகரம் நபிகளாருக்காகவே ஹிந்துஸ்தானத்து மன்னர் ஒருவரால் நிர்மாணிக்கப்பட்டது என்ற வரலாறு உண்டு. அது தனியாகக் காண வேண்டிய ஒன்று.