பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95



கூட்டத்தினருக்கு உதவி செய்யப்படும். ஆண்டவனுடைய நபி அவர்கள் உதவிக்காக எப்போது கூப்பிடுகிறார்களோ, அப்போது அவர்கள் வந்து உதவி புரியவேண்டும்.”

அடுத்து, பெருமானார் அவர்கள், பனூ லம்ராக் கூட்டத்தாரின் நண்பர்களான பனூ முத்லஜ் என்னும் கோத்திரத்தாரிடம் சென்று, மேலே கூறிய நிபந்தனைப்படி மற்றோர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.


74. உயர்வான பண்பு

குறைஷிகள் யுத்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷூ என்பவரையும், அவருடன் பன்னிருவரையும் உளவு பார்த்து வருவதற்காக, நக்லா என்ற ஊரின் பக்கமாக அனுப்பினார்கள்.

பெருமானார் அவர்கள் மேற்படி அப்துல்லாஹ்விடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அதைத் திறந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பி இருந்தார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்துல்லாஹ் அந்தக் கடிதத்தைத் திறந்து பார்த்தபோது, "நீர் நக்லாவில் தங்கி இருந்து, குறைஷிகளின் நடவடிக்கைகளை அறிந்து தெரிவிக்க வேண்டியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அப்துல்லாஹ் போகும் போது, தற்செயலாக வழியில் ஷாம் தேசத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினர் எதிர்ப்பட்டனர். அப்துல்லாஹ் அவர்களைத் தாக்கினார். அவர்களுள் சச்சரவு ஏற்பட்டு, இப்னுல் ஹல்ரமி என்னும் குறைஷி கொல்லப்பட்டார். மற்றும் இருவர் சிறை பிடிக்கப்பட்டார்கள். அப்துல்லாஹ்விடம் ஏராளமான பொருள்களும் அகப்பட்டன.

அவர் மதீனாவுக்கு வந்து, பெருமானார் அவர்களிடம் நடந்தவற்றை விவரித்து, தாம் கொண்டு வந்த பொருள்களையும் சமர்ப்பித்தார்.