பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96


 பெருமானார் அவர்கள் அப்துல்லாஹ்விடம் “இவ்வாறு செய்வதற்கு உமக்கு நான் அனுமதி தரவில்லையே?" என்று. கூறி, அவர் சமர்ப்பித்த பொருள்களை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பெருமானார் அவர்கள் கட்டளைக்கு மாறாக அவர் செய்ததை, மற்ற தோழர்களும் கண்டித்தார்கள்.

அப்துல்லாஹ் சண்டை செய்ததும், இப்னுல் ஹல்ரமி கொல்லப்பட்டதும் எதிர்பாராமல் நிகழ்ந்ததாகும். அதில் பெருமானார் அவர்களின் தூண்டுதல் எதுவும் இல்லை.

எனினும், இப்னுல் ஹல்ரமி உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறைப பிடிக்கப்பட்ட இருவரும் குறைஷிகளிடம் செல்வாக்குள்ளவர்கள்.

இவற்றால் குறைஷிகளுக்கு, பெருமானார் அவர்களிடம் ஏற்கனவே உள்ள பகைமை அதிகமாயின.


75. மதீனாவைத் தாக்க முயற்சி

மதீனாவைத் தாக்குவதற்காகக் குறைஷிகள் பெரிய ஆரவாரத்தோடு புறப்பட்டு விட்டார்கள்.

அச்செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிந்தது. உடனே தோழர்களை எல்லாம் அழைத்து, செய்தியைச் சொன்னார்கள்.

அபூபக்கர் முதலானவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

பெருமானார் அவர்கள் அன்சாரிகளின் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

அப்பொழுது கஸ்ரஜ் கூட்டத்தின் தலைவர் எழுந்து பெருமானார் அவர்களிடம், “தாங்கள் கட்டளையிட்டால், நாங்கள் கடலில் கூட விழுந்து விடுவோம்” என்று கூறினார்.

அடுத்து, மற்றொருவர் எழுந்து, "நாங்கள் எல்லோரும் உங்களுக்கு வலது புறமாகவும், இடது புறமாகவும் முன்னும் பின்னும் நின்று சண்டை செய்வோம்” என்றார்.