பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104



அதற்குப் பழி வாங்குவதற்காக மக்கா நகரம் முழுவதுமே புறப்பட்டுச் சென்றது. அது ‘பத்ரு' யுத்தத்தில் வந்து முடிந்தது. ஆனால், அதில் உண்டான சேதமோ, அவர்களுக்குள் எரிந்து கொண்டிருந்த பகைத் தீயை மேலும் அதிகமாக வளர்த்து விட்டது.

மக்காவிலிருந்த குறைஷி பிரபுக்களில் முக்கியமானவர்கள் எல்லாம் அந்தச் சண்டையில் மாண்டுவிட்டதால், ஒவ்வொரு வீட்டிலும் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

பத்ருச் சண்டையின் போது, சரக்குகளை ஷாம் தேசத்துக்குக் கொண்டு சென்று அங்கு விற்பனை செய்து, அதிக இலாபத்தைச் சம்பாதித்து திரும்பிய குறைஷி வர்த்தகக் கூட்டத்தினர் அவரவருக்கு உரிய மூலதனத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, இலாபம் அனைத்தையும் பொது நிதியாக வைத்தனர்.

பத்ருச் சண்டையில் மாண்டவர்களின் இறுதிச் சடங்குகள் யாவும் முடிந்த பிறகு, குறைஷிகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஆயத்தமாயினர்.

குறைஷிகளில் முக்கியமானவர்கள் சிலரும், அபூஜஹிலுடைய மகன் இக்ரிமாவும், பத்ருப் போரில் தங்களுடைய நெருங்கிய உறவினர்களை இழந்திருப்பவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு அபூஸூப்யானிடம் தூது சென்றனர்.

அவரிடம், “முஹம்மது நம் இனத்தவரைக் கருவறுத்து விட்டார். ஆகவே, பழி வாங்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம், வியாபாரத்தில் கிடைத்த இலாபத் தொகையை இதற்குச் செலவு செய்ய வேண்டும் என்று நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்” என்று சொன்னார்கள்.

அபூஸூப்யானும் அவர்களின் கருத்தை மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.

முஸ்லிம்களும் பலம் வாய்ந்தவர்கள்தாம் என்பதைப் பத்ருப் போரின் போது குறைஷிகள் நன்கறிந்தார்கள். ஆகையால், தகுந்த ஆயத்தத்தோடு போய்த் தாக்க வேண்டும் என்று கருதி, வேண்டிய ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்தார்கள்.