பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105



குறைஷிகளில் பிரபலமான இரண்டு கவிஞர்களைக் கொண்டு அரபியர்களின் ஊக்கத்தைக் கிளப்பி விடக் கருதி, சுற்றுப்புறங்களுக்கு அவர்களை அனுப்பி, கவிதைகளால் மக்களைத் தூண்டச் செய்தனர்.

அக்காலத்தில், போர் வீரர்களைத் தூண்டுவதற்காகப் பெண்களும் போர்க்களத்துக்குப் போவது உண்டு. போர் முனைக்குப் பெண்கள் வந்து விட்டால், எங்கே தங்களைக் கேவலமாக எண்ணி விடுவார்களோ என்று கருதி, அரபி வீரர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் போர் புரிவார்கள்.

மக்காவில் தங்கள் மக்களை இழந்திருந்த பெண்கள் பலர், பழிவாங்கிய பின்னரே, அமைதியுடன் இருப்பது எனச் சபதம் மேற்கொண்டு, போர் வீரர்களோடு போர்க்களத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

பெருமானார் அவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் அவர்கள் முஸ்லிமாகி, மக்காவிலே இருந்தார்கள். ஆகவே, மக்காவில் நிகழும் செய்திகளை எல்லாம் அவ்வப்போது விவரமாக எழுதி, ஒரு தூதுவர் மூலமாகப் பெருமானார் அவர்களுக்கு அனுப்பினார்கள்.

பெருமானார் அவர்கள், செய்தியை அறிந்ததும் ஹிஜ்ரி மூன்றாவது வருடம், ஷவ்வால் மாதத்தில், குறைஷிகளின் வருகையை அறிந்து வருமாறு இரண்டு உளவாளிகளை அனுப்பினார்கள். அவர்கள் போய் வந்து, ‘குறைஷிகள் ஏராளமான படையுடன் மதீனாவுக்கு அருகில் வந்து விட்டதாக' அறிவித்தனர். படைகளின் எண்ணிக்கையையும் அறிந்து வந்து தெரிவித்தார்கள்.

குறைஷிகளின் படையெடுப்பு நெருங்கியதை அறிந்த முஸ்லிம்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.

எதிரிகளின் வருகையைக் கண்காணிப்பதற்காகப் பள்ளிவாசலின் வாயிலில் ஆயுத பாணிகளாக இருவர் காத்துக் கொண்டிருந்தனர்.


82. பெருமானார் கண்ட கனவு

பெருமானார் அவர்கள் காலையில், தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள்.