பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108



அணி வகுத்தார்கள். அக்குன்று தங்களுக்குப் பக்க பலமாக இருக்கும் என்று அவ்வாறு செய்தார்கள்.

முஸ்அப் இப்னு உமைர் என்பவரைக் கொடி பிடிக்கும் வேலையில் நியமித்தார்கள்.

ஸூபைர் இப்னு அவ்வாம் என்பவர் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஹம்ஸா அவர்கள் கவசம் அணியாத படைகளுக்குத் தலைவராக அமைக்கப்பட்டார்கள்.

முஸ்லிம் படைக்குப் பின்புறத்திலுள்ள உஹத் குன்றில் சிறு கணவாய் ஒன்று இருந்தது. அதன் வழியாகக் குன்றின் பின்புறமிருந்து பகைவர்கள் வரக்கூடும். ஆதலால், பாதுகாப்பிற்காக அம்பு எய்வோர் ஐம்பது பேரை அங்கே நிறுத்தி, “சண்டை வெற்றியடைந்தாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது” எனப் பெருமானார் அவர்கள் கண்டிப்பான உத்தரவு இட்டிருந்தார்கள்.

****

குறைஷிகளோ பத்ருச் சண்டையில் அனுபவம் அடைந்தவர்கள். ஆதலால், இப்பொழுது முழுமையான தயார் நிலையில் வந்திருந்தார்கள். படைகளை ஒழுங்காக அணி வகுத்திருந்தனர். பத்ருப் போரில் மாண்ட வலிதின் குமாரர் காலித் படையின் வலது புறத் தளபதியாக இருந்தார்.

அபூஜஹிலின் குமாரர், இக்ரிமா இடது புறத் தளபதியானார்.

மத்தியப் பகுதியின் குதிரை வீரர்களுக்குத் தலைவராக ஸப்வான் இப்னு உமையா ஏற்படுத்தப் பட்டார்.

அம்பு எய்வோர்களை, வேறு பகுதியில் ஒதுக்கி வைத்திருந்தனர்.

அவசியமான சந்தர்ப்பத்தில், உதவுவதற்காக இருநூறு குதிரைப் படையைத் தனியாக வைத்திருந்தனர்.