பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112



அதைக் குறைஷிகளின் படைத் தலைவர் காலித் கண்டு, குன்றின் பின்புறமாக வந்து தாக்கினார். அந்தப் பாதையில் அப்துல்லாஹ் இப்னு ஸுபைரும், அவருடன் சிலரும் சேர்ந்து தடுத்தும் பயன்படவில்லை. அவர்கள் அனைவரும் வெட்டுப்பட்டனர். அதனால் கணவாய்ப்பாதை தடுப்பார் இல்லாமல் வழி திறக்கப் பட்டிருந்தது.

காலித் அவ்வழியாக, குதிரை வீரர்களுடன் வந்து, முஸ்லிம் படையைப் பின்புறமாய் நின்று தாக்கினார்.

குறைஷிகளின் பொருள்களைக் கொள்ளையிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் படைகள் பின்புறம் திரும்பிப் பார்த்தபோது, குறைஷிகளின் குதிரைப் படை வாளேந்தி, முஸ்லிம் படையைத் தாக்கிக் கொண்டிருந்தது.

பின்வாங்கிச் சென்று கொண்டிருந்த குறைஷிகளின் படையோ, காலித் தாக்குவதைக் காணவும் திரும்பி முன்புறம் தாக்கின.

இருபுறமும் தாக்குதல் நிகழவே, திடீரென உண்டான குழப்பத்தினால், இரண்டு படைகளும் தங்களைச் சேர்ந்தோர், அயலார் என்ற வேறுபாடு இல்லாமல் தாக்கிக் கொண்டனர்.


85. பொய்யான வதந்தி

சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் கொடியைத் தாங்கிக் கொண்டிருந்த முஸ்அபுப்னு உமைர் என்பவர் குறைஷி ஒருவரால் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டவரோ, ஏறக்குறைய பெருமானார் அவர்களைப் போன்ற முகத் தோற்றம் உள்ளவர். அதனால், பெருமானார் அவர்கள் உயிர் துறந்து விட்டதாகக் குறைஷி வீரர்களில் ஒருவர் கூக்குரலிட்டார்.

அந்தச் சப்தத்தைக் கேட்டதும், முஸ்லிம்கள் அணியில் பரபரப்பும், குழப்பமும் மேலிட்டன. பெரிய வீரர்களின் கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. இத்தகைய குழப்பத்தில், முன்னால் இருந்த அணியானது, பின்னால் இருந்த அணியின் மீது விழுந்து, பெரிய கலக்கம் அடைந்தது.