பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123



போர் முனைக்கு வந்து பெருமானார் அவர்களின் திருமுகத்தைப் பார்த்ததும், தம்மை மறந்து, “தாங்கள் இருக்கும் போது எவ்வளவு துன்பங்கள் வந்த போதிலும் அவை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; நானும், என் தந்தையும், என் சகோதரரும், என் கணவரும் தங்களுக்கு அர்ப்பணமாகி விட்டோம். ஆண்டவனுடைய திருத்தூதரே! தங்களைப் பெற்றிருக்கும் போது கேவலம் நாங்கள் என்ன?” என்று கூறினார்.


96. வெற்றியா? தோல்வியா?

உஹத் சண்டை முடிவான போது, முஸ்லிம் படையில் காயம் அடைந்தவர்கள் அதிகமாக இருந்தனர்.

இரண்டு கட்சிப் படையினரும் போர் முனையை விட்டுப் பிரிந்து விட்டனர்.

அபூஸூப்யானும் கலக்கத்தோடு, தம்முடைய படையோடு மக்காவை நோக்கிப் பயணமானார். வெகு தூரம் சென்றவுடன் மீண்டும் போர் முனைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

“சண்டையில் நாம் வெற்றி பெற்றதாக எண்ணினோம். ஆனால், நாம் வெற்றி பெற்றதற்கான அடையாளம் எதுவுமே இல்லை. எதிரிகளின் பக்கமிருந்து, ஒருவரையாவது சிறைப் படுத்தவில்லை. போர்க் களத்தையும் எதிரிகள் வசம் விட்டு விட்டோம். தவிர, மதீனாவையும் ஒன்றும் செய்யாமல் வந்து விட்டோம். ஆகையால், திரும்பிச் செல்வோம்” என்ற எண்ண அலைகளுடன், மதீனாவை நோக்கித் திரும்பலானார்.

பெருமானார் அவர்கள் மதீனா போய்ச் சேர்ந்ததும், முஸ்லிம்கள் சேதம் அடைந்து விட்டார்கள் என்று அபூஸூப்யான் நினைத்து, மதீனாவைத் தாக்காமல் இருப்பதற்காக, அவரைப் பின் தொடர்ந்து துரத்திச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதற்காக எழுபது பேர் கொண்ட ஒரு கூட்டம் சேர்ந்தது. அதில் அபூபக்கர் அவர்களும், ஸூபைர் அவர்களும் சேர்ந்திருந்தனர்.