பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126



ஆனால், அவர்களுக்குத் தாம் பொறுப்பாக இருப்பதாக அந்தத் தலைவர் உறுதி அளித்தார். அதன்பின், தன்னலமற்ற எழுபது அன்சாரிச் சீலர்களை அவருடன் அனுப்பிவைத்தார்கள்.

பனூ ஆமீர் கோத்திரத்தார் வாழும் ஊருக்கு அருகில் முஸ்லிம்கள் போய்ச் சேர்ந்ததும், அங்கேயே நின்று கொண்டார்கள்.

ஊர்த் தலைவருக்குப் பெருமானார் அவர்கள் எழுதிய கடிதத்தைக் கொடுத்து வருமாறு தங்களில் ஒருவரை ஊருக்குள் அனுப்பினார்கள். கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுத்தவரை, அவர் கொன்று விட்டதோடு, சுற்றிலும் உள்ள கூட்டத்தார்களை, முஸ்லிம்களோடு சண்டை செய்யுமாறு தூண்டி விட்டார். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஊருக்கு வெளியே இருந்த முஸ்லிம்களைச் சூழ்ந்து கொண்டு அம்ரு இப்னு உமையா என்பவரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைத் தாக்கிக் கொன்று விட்டனர்.

“என் தாய் ஒரு அடிமையை விடுதலை செய்வதாக உறுதி மேற்கொண்டிருந்தார். அதற்காகவே, உன்னை விடுவிக்கிறேன்” என்று அம்ரு இப்னு உமையாவிடம் கூறி, அவருடைய தலை மயிரைக் கத்தரித்து அனுப்பி விட்டார்.

கொல்லப்பட்டவர்களுக்கு மத்தியில், பிரக்ஞையற்றிருந்த மற்றொரு முஸ்லிமும் உயிர் தப்பினார். அவருக்குப் பிரக்ஞை வந்ததும் மதீனாவுக்குத் திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை அறிந்த பெருமானார் அவர்கள் அளவற்ற வருத்தம் அடைந்தார்கள். அம்ரு இப்னு உமையா மதீனாவுக்குத் திரும்பி வரும் வழியில் பனு ஆமீர் கூட்டத்தைச் சேர்ந்த இருவரைச் சந்தித்தார். அந்தக் கூட்டத்தினர், முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமை அவர் மனத்தை ஊடுருவியது. அதனால் அவ்விருவரையும் கொன்று விட்டார்.

ஆனால், கொல்லப்பட்ட இருவருக்கும், பெருமானார் அவர்கள் ஏற்கனவே அபயப் பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தார்கள். இவ்விஷயம் அம்ருஇப்னு உமையாவுக்குத் தெரியாது. இந்த நிகழ்ச்சியைப் பெருமானார் அவர்களிடம் தெரிவித்ததும், அவர்கள்