பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136



சிலர் கைபரிலும், சிலர் ஸிரியாவிலும் சென்று குடியேறினார்கள். அவர்கள் போகும் போது சிறிது கூட வருத்தமின்றி மகிழ்ச்சியோடும், வாத்தியங்களை முழங்கிக் கொண்டும் சென்றார்கள்.

கைபரில் செல்வாக்குப் பெற்ற அவர்களே தலைமை இடத்தைப் பெற்றனர்.


104. பகைவர்களின் கூட்டு முயற்சி

யூதர்களும், குறைஷிகளும் ஒன்று சேர்ந்து மக்காவுக்கும், மதீனாவுக்கும் மத்தியிலுள்ள நாடுகள் அனைத்தையும் இஸ்லாத்துக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதனால் பல கூட்டத்தார் ஒன்று சேர்ந்தும், தனியாகவும் மதீனாவைத் தாக்கத் தயாரானார்கள்.

ஒன்றிரண்டு கூட்டத்தார் தாக்குவதற்கான ஆயத்தத்தோடு புறப்படும் சமயம், பெருமானார் அவர்களுக்குச் செய்தி எட்டியது. அவர்கள் படைகளைத் தயார் செய்து கொண்டு, எதிரே செல்ல முற்பட்டார்கள். அதைக் கண்ட அந்தக் கூட்டத்தார் ஓடி மறைந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு ஷஅபான் மாதம் மதீனாவுக்கு இருநூறு மைல் தொலைவிலுள்ள முரீஸீ என்னும் ஊரில், பனூ முஸ்தலிக் என்னும் கூட்டத்தின் தலைவரான அல் ஹாரிதுப்னு அபீலிரார் என்பவர் மதீனாவைத் தாக்குவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இது பெருமானார் அவர்களுக்குத் தெரிந்தது. அந்தச் செய்தி உண்மையே என்று மற்றொரு உளவாளி மூலமாகவும் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

அக்கூட்டத்தின் தலைவர் தங்களைத் தாக்க புறப்படுவதற்கு முன்னரே, அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பெருமானார் அவர்கள் முஸ்லிம் படைகளை நடத்தி அவ்வூருக்குச் சென்றார்கள்.