பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145



ஒரு நாள், தோழர்களில் சிலர் பசியினால் வாடி வருந்திப் பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் வயிற்றைத் திறந்து காட்டினார்கள். ஒவ்வொருவருடைய வயிற்றிலும் ஒரு கல் வைத்துக் கட்டப்பட்டிருந்தது.

அப்போது பெருமானார் அவர்கள் தங்கள் வயிற்றைக் காட்டினார்கள். அதில் மூன்று கற்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன.

அரபி தேசத்தில், பசி வேளையில் குறுக்கு வளையாமல் இருப்பதற்காக, மக்கள் வயிற்றில் கல்லை வைத்துக் கட்டிக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாயிருந்தது.


109. “எங்களிடம் வாளைத் தவிர வேறு இல்லை!”

முற்றுகை நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டிருந்தது.

எதிரிகள் அகழைத் தாண்ட முடியாமல், கற்களையும் அம்புகளையும் எறிந்து கொண்டிருந்தனர்.

பெருமானார் அவர்கள் முஸ்லிம் படையைv பல பகுதிகளிலும் பிரித்து வைத்திருந்தார்கள்.

முற்றுகை நீடித்துக்கொண்டு போவதால், அன்ஸாரிகள் தைரியம் இழந்து விடக் கூடாது என்று நினைத்து பெருமானார் அவர்கள், எதிரிகளில் ஒரு பிரிவினரான கத்பான் கூட்டத்தாரை தாங்கள் வசப்படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்தார்கள்.

அதாவது மதீனாவின் விளை பொருள்களில் மூன்றில் ஒரு பாகத்தை, ஒவ்வொரு வருடமும் கத்பான் கூட்டத்தாருக்குக் கொடுத்து விடுவது என்றும், அதற்குப் பதிலாக அவர்கள் சண்டையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு, ஓர் உடன்படிக்கை அவர்களோடு செய்து கொள்ளலாமா என்று எண்ணினார்கள்.

அதைப் பற்றி அன்ஸாரிகளின் தலைவர்களான ஸஃதுப்னு உபாதா, ஸஃதுப்னு முஆத் ஆகிய இருவரிடமும் பெருமானார் அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்.

11