பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147



தாக்கி, அதைக் கடந்து, முஸ்லிம்களுடன் சண்டை செய்வது எனத் தீர்மானித்தார்கள்.

அரபி தேசத்தில் பிரபல போர் வீரர்களான நெளபல், ஹுபைரா, அம்ரு, லிரார் ஆகிய நால்வரும் குதிரைகளின் மீது இருந்து அகழைத் தாண்டி விட்டனர். அவர்களில் அம்ரு இப்னு அப்தூத் மிகவும் பிரபலமானவர். அவரை அரபி தேசத்தார் ஆயிரம் குதிரை வீரர்களுக்கு சமானமாகக் கருதியிருந்தார்கள்.

முன்னர், பத்ருச் சண்டையில் காயம் அடைந்து, மக்காவுக்கு திரும்பிப் போகும் போது 'முஸ்லிம்களைப் பழி வாங்கும் வரை, தம் தலையில் எண்ணெய் தடவுவதில்லை' எனச் சபதம் செய்திருந்தார். அவருக்கு வயது அப்போது தொண்ணூறு. அத்தகையவர் எல்லோர்க்கும் முன்னே சென்று, “என்னுடன் சண்டை செய்வதற்கு யாராவது முன் வருவார்களா?" என்று கூறினார்.

“நான் வருகிறேன்” என்றார்கள் அலீ.

ஆனால், அவர்கள் போவதைப் பெருமானார் தடுத்து விட்டார்கள்.

முன்போலவே அம்ரு இரண்டாவது முறையும் கூவினார்.

அலீ அவர்களைத் தவிர வேறு எவரும் பதில் அளிக்கவில்லை.

மூன்றாவது முறையும் அம்ரு கூவினார்.

அப்போது பெருமானார் அவர்கள், அலீ அவர்களுக்கு விடை கொடுத்து, தங்கள் கையிலிருந்த வாளையும் கொடுத்துத் தலைப்பாகையையும் கட்டி விட்டார்கள்.

உலகில் எவரேனும் மூன்று கோரிக்கைகளைத் தம்மிடம் வேண்டிக் கொண்டால், அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றி வைப்பதாக அம்ரு முன்னர் ஒருமுறை வாக்களித்திருந்தார். அந்த வாக்குறுதி பற்றி அம்ருக்கும், அலி அவர்களுக்கும் உரையாடல் நிகழ்ந்தது.

“நீர் இஸ்லாத்தைத் தழுவுமாறு, உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அலீ அவர்கள்.