பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149



அக்பர்” என முழங்கினார்கள். அம்ரு திடீரென்று சாய்ந்து விட்டார்.

அதைக் கண்டதும் குறைஷி வீரர்கள் எல்லோரும் அலி அவர்களைச் சூழ்ந்து தாக்கினார்கள். ஆனால், ஒருவர் பின் ஒருவராக, அலியின் வாளுக்கு அவர்கள் இரையானார்கள்.

அதன் பின்னர், குறைஷிகள் முஸ்லிம்கள் இருக்கும் இடத்தைந் நோக்கிக் கற்களையும் அம்புகளையும் விடாமல் எறிந்து கொண்டிருந்தார்கள்.


111. வீரச் செயல் புரிந்த பெண்மணி

அகழ்ச் சண்டையின் காரணமாகப் பெண்கள் பாதுகாப்புள்ள கோட்டைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தனர்.

அந்தக் கோட்டை பனூ குறைலா கூட்டத்தார் வாழும் இடத்துக்கு அருகில் இருந்தது.

முஸ்லிம் வீரர்கள் எல்லோரும் பெருமானார் அவர்களுடன் அகழிலிருந்து சண்டை செய்து கொண்டிருப்பதால், பெண்கள் இருக்கும் கோட்டை பாதுகாப்பற்று இருக்கும் என்று எண்ணி, யூதர்கள் அதைத் தாக்கத் தீர்மானித்தார்கள்.

முதலில் நிலைமையை அறிந்து வருமாறு ஒரு யூதரை அனுப்பினார்கள். அந்த யூதர் கோட்டையின் வாசல் வரை போய்க் கோட்டையை எவ்வழியாகத் தாக்கலாம் என்று கவனித்துக் கொண்டிருந்தார். அந்த யூதர் வருவதைப் பெருமானார் அவர்களின் மாமியார் ஸபிய்யா நாச்சியார் பார்த்து விட்டார்கள். உடனே கோட்டையின் காவலராயிருந்த கவிஞர் ஹஸ்ஸானைக் கூப்பிட்டு, அந்த யூதரை வெட்டி விடுமாறு கூறினார்கள்.

ஹஸ்ஸான் ஒரு நோயாளி. மேலும் அவருடைய இருதயம் பலவீனம் அடைந்திருந்தது. அதனால், சண்டை நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர் காணச் சகிக்க மாட்டார். இந்தக் காரணத்தை ஸபிய்யா நாச்சியாரிடம் சொல்லி, “இவ்வேலைக்கு நான் தகுதியுடையவனாக இருந்தால் போர் முனைக்குப் போயிருக்க மாட்டேனா?” என்றார்.