பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165


செய்து வருகிறேன். முஹம்மது நியாயமான நிபந்தனைகளையே சொல்லி அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.

பிறகு, குறைஷிகளின் அனுமதி பெற்று, உர்வத் பெருமானார் அவர்களிடம் சென்று, குறைஷிகளின் கட்சியை எடுத்துக் கூறி விட்டு, இறுதியில், "உங்களுடைய இனத்தாராகிய குறைஷிகளை அழிப்பதற்காகவே, நீங்கள் இப்பொழுது கூட்டத்தோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. குறைஷிகள் ஆயுதபாணிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தடுப்பதற்கு உங்கள் கூட்டத்தினருக்கு வலிமையில்லை. இவர்கள் எல்லோரும் உங்களைக் கை விட்டுவிட்டு, தூசியைப் போல் பறந்து போகும்படிச் செய்து விடுவோம்” என சற்றுக் கடுமையாகக் கூறினார்.

அதைக் கேட்டதும் ஹலரத் அபூபக்கருக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. உர்வத்தை மிகவும் வன்மையாகக் கண்டித்து, “நாங்கள் நாயகம் (ஸல்) அவர்களைக் கை விட்டு ஓடி விடுவோம் என்றா, நீர் நினைக்கிறீர்” என்று கேட்டார்கள்.

உர்வத் உடனே, “அவர் யார்?” என்று கேட்டார்.

“அபூபக்கர்” என்று பெருமானார் பதிலளித்தார்கள்.

“அவருடைய கடுமையான சொற்களுக்கு நான் தக்க பதில் சொல்லியிருப்பேன். ஆனால், முன்னர், அவர் எனக்குச் செய்த ஓர் உதவிக்காகக் கடமைப்பட்டிருக்கிறேன்; இப்போது அந்தக் கடப்பாடு தீர்ந்துவிட்டது” என்றார் உர்வத்.

இறுதியில், எவ்வித முடிவும் இல்லாமல், உர்வத் குறைஷிகளிடம் திரும்பிச் சென்றார்.

பெருமானார் அவர்களிடம் தோழர்கள் வைத்திருக்கும் அளவற்ற அன்பும் விசுவாசமும் அவருக்கு வியப்பை உண்டாக்கிற்று.

“ரோமாபுரிச் சக்கரவர்த்தி, பாரசீக அரசர், அபீசீனிய மன்னர் ஆகியோரின் அரசவைகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இத்தகைய பணிவையும், பற்றுதலையும் நான் எங்கேயும் காணவில்லை. முஹம்மது பேசும் பொழுது, அவருடன் இருப்பவர்கள்