பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167



பேச்சு வார்த்தைகள் நெடுநேரம் நடந்தபடியால், தூதுவர் இருவரும் திரும்பத் தாமதமாயிற்று. எனவே, அவர்கள் இருவரும் குறைஷிகளால் கொல்லப்பட்டனர் என்ற வதந்தி கிளம்பிவிட்டது.

“அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டது உண்மையானால், அதற்குப் பழி வாங்கத் தவற மாட்டோம்” என்று சொல்லி, தங்களுடன் இருந்த தோழர்களை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் கூட்டி வந்து அவர்களிடம், “உயிர்த் தியாகம் செய்ய முன் வர வேண்டும்” என வாக்குறுதி பெற்றார்கள் பெருமானார்.

“பைஅத்துர் ரில்வான்” என்ற பெயர் பெற்ற இந்த நிகழ்ச்சி, “பைஅத்துல் அகபாவை’ப் போன்று இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானதாகும்.


125. மற்றொரு தூதர் வருகிறார்

குறைஷிகள் நன்றாக ஆலோசித்து, தங்களில் வாக்குச் சாதுரியமானவரான ஸூஹைலுப்னு அம்ரு என்பவரைத் தூதராக, பெருமானார் அவர்களிடம் போய்ப் பேசுமாறு அனுப்பினார்கள்.

“நாயகமும், அவர்களுடன் வந்த முஸ்லிம்களும், அவ்வருடம் மக்காவுக்குள் நுழையக் கூடாது” என்ற நிபந்தனையின் பேரில், சமாதானம் பேச வேண்டும் என்று குறிப்பாகச் சொல்லி அனுப்பினார்கள்.

குறைஷிகளின் தூதர் ஸூஹைல் பெருமானாரிடம் வந்து, குறைஷிகளின் கட்சியை எடுத்துச் சொன்னார். வெகு நேரம் வரை பேச்சு நீடித்தது. இறுதியாக, சில நிபந்தனைகளின் மீது சமாதானம் முடிவாகியது.

நாயகம் (ஸல்) அவர்கள், அலீ அவர்களை அழைத்து சமாதான உடன்படிக்கையை எழுதும்படிக் கட்டளை இட்டார்கள்.

இஸ்லாமிய மரபுப்படி உடன்படிக்கையை ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்” என்று எழுதத் துவங்கினார்கள் அலீ (ரலி) அவர்கள்.