பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175



பெருமானார் அவர்கள், அவரை மக்காவுக்குத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள்.

அப்பொழுது அவர் பெருமானார் அவர்களிடம், "குபிரில் சேருமாறு நிர்ப்பந்திக்கும் காபிர்களிடமா, என்னைப் போகச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார்.

பெருமானார் அவர்கள், "அபூ பஸீர்! உமக்கும் உம்மைப் போன்ற நிராதனவானவர்களுக்கும் நிச்சயமாக, அல்லாஹ் ஒரு வழி செய்வான்” என்று கூறி, அவரை குறைஷித் தூதர்களுடன் அனுப்பி விட்டார்கள்.

அபூ பஸீர் தூதர் இருவருடன் மக்காவுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அத்தூதர்களில் ஒருவரை வாளால் வெட்டி வீழ்த்தினார். மற்றொருவர், அதைப் பார்த்து மதீனாவுக்கு ஓடி வந்து, பெருமானார் அவர்களிடம் நிகழ்ந்ததைக் கூறி முறையிட்டார்.

அப்பொழுது அபூபஸீரும் திரும்பி மதீனாவுக்கு வந்து விட்டார்.

அவர் பெருமானார் அவர்களிடம், “உடன்படிக்கைப்படி தாங்கள் என்னை அனுப்பி விட்டீர்கள். பிறகு நிகழ்ந்ததற்குத் தாங்கள் பொறுப்பு இல்லை” என்று கூறி விட்டு வெளியே போய்விட்டார்.


132. தடை நீங்கியது!

அபூபஸீர் மதீனாவை விட்டுத் தப்பி, கடற்கரை ஓரமாக இருந்த அல் ஈஸ் என்னும் இடத்தில் போய்த் தங்கிவிட்டார்.

அங்கே போய் அவர் தங்கி இருக்கும் செய்தியானது, மக்காவில் ஆதரவற்ற நிலையில், துன்பத்தில் உழன்று கொண்டிருந்த முஸ்லிம்களுக்குத் தெரிந்தது.

குறைஷிகளின் கொடுமையிலிருந்து தாங்கள் தப்பிச் செல்வதற்கு வழி ஏற்பட்டு விட்டது என்று கருதி, அபூ பஸீர் தங்கியிருந்த பகுதிக்கு ஒருவர் பின் ஒருவராக, மறைவாக, வரத் தொடங்கி விட்டார்கள்.

நாளுக்கு நாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அல் ஈஸில் அதிகமாயிற்று. அவர்கள் அனைவரும் அங்கே நிலையாகத் தங்கிவிட்டார்கள்.