பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177



நிறைவேற்றுங்கள். உண்மையை உணருமாறு மக்களை அழைப்பீர்களாக!” என்பதாக இறுதியில் குறிப்பிட்டார்கள்.

ரோமாபுரி அரசர் கெய்ஸர் (ஸீஸர்), பாரசீக அரசர் குஸ்ரு பர்வேஸ், எகிப்து அரசர் முகெளசீஸ், அபிசீனியா அரசர் நஜ்ஜாஷீ ஆகியோருக்கு இஸ்லாத்தின் பெருமையை எடுத்துக் கூறி, அதில் சேருமாறு கடிதம் எழுதி, தனித் தனியே தூதர்கள் மூலம் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.


134. தூதரும் வியாபாரிகளும்

ரோமாபுரி நாட்டினருக்கும், பாரசீக நாட்டினருக்கும் நிகழ்ந்த போரில், ரோமாபுரி நாட்டினருக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. அதைக் கொண்டாடுவதற்காக, ரோமாபுரி அரசர் ஷாம் தேசத்துக்கு வந்திருந்தார்.

பெருமானார் அவர்களின் தூதர் ஷாம் தேசப் பிரதிநிதி மூலமாகக் கடிதத்தை ரோமாபுரி அரசர் கெய்ஸரிடம் சேர்ப்பித்தார்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட அரசர், “அரபு நாட்டிலிருந்து யாரேனும் இங்கே வந்திருக்கின்றனரா?” என விசாரித்தார்.

சிலர் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களை அழைத்து வருமாறு அரசர் கட்டளையிட்டார். வியாபாரத்துக்காக, ஷாமுக்கு வந்திருந்த குறைஷிகளில் சிலர் அரசசபைக்குக் கொண்டு வரப்பட்டனர்,

"ஆண்டவனுடைய தூதர் என்று கூறப்பட்டுள்ள பெரியோருக்கு நெருங்கிய உறவினர் யாரேனும் உங்களில் இருக்கின்றனரா?” என்று கேட்டார் அரசர்.

“நானே நெருங்கிய உறவினர்” எனக் கூறினார் அபூ ஸூப்யான்.

அரசருக்கும் அபூ ஸூப்யானுக்கும் மத்தியில் மொழிபெயர்ப்பாளரை நியமித்து, உரையாடல் தொடங்கியது.


13