பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179



அவ்வாறு யாராவது இருந்திருந்தால், இழந்த அரசைப் பெறுவதற்காகவே, இவரும் தம்மை நபி என்று கூறிக் கொள்கிறார் என்று சொல்லலாம்.

அவர் ஒரு போதும் பொய் சொன்னதில்லை என்று நீரே கூறுகின்றீர்.

ஆண்டவனுடைய அடியார்களிடம் எவர் ஒரு போதும் பொய் சொல்லி இருக்க மாட்டோரோ, அத்தகையவர் ஆண்டவனைப் பற்றிய விஷயத்தில் எவ்வாறு கட்டுப்பாடான பொய் சொல்லுவார்?

ஏழைகளே முதலில் அவரைப் பின்பற்றியதாகச் சொல்கிறீர்.

தீர்க்கதரிசிகளை முதன் முதலில் ஒப்புக் கொள்பவர்கள் ஏழைகளே!

அவருடைய மதத்தைத் தழுவியவர்கள் எவரும் பின்னர், வெறுப்படைந்து அதை விட்டு அகன்றதில்லை என்று கூறுகின்றீர்.

விசுவாசத்தின் உண்மை நிலை அதுவே. எப்பொழுது விசுவாசம் உள்ளத்தில் குடி கொண்டு விட்டதோ, பிறகு அது ஒரு போதும் நீங்குவதில்லை.

அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாகக் கூறுகின்றீர்.

உண்மையான மதமானது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கும்.

போர்களில், சில வேளைகளில் அவருக்கும், சில வேளைகளில் உம்முடைய கூட்டத்தினருக்கும் வெற்றி கிட்டியிருப்பதாகக் கூறுகிறீர்.

விரோதிகளுக்கு மத்தியில் தீர்க்கதரிசிகள் இவ்வாறே சோதிக்கப்படுகின்றனர். ஆனால் இறுதியில் தீர்க்கதரிசிகளுக்கே வெற்றி கிட்டும்.