பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182



அன்று இரவே, பாரசீக நாட்டு அரசரை, அவருடைய குமார் கொன்று விட்டார் என்ற செய்தி பெருமானார் அவர்களுக்கு, ஆண்டவனால் அறிவிக்கப்பட்டது.

மறுநாள் காலையில், தூதர்கள் இருவரையும் பெருமானார் அவர்கள் அழைத்து “உங்களுடைய அரசர் நேற்று இரவு கொல்லப்பட்டு விட்டார்” என்று தெரிவித்தார்கள்.

தூதர்கள் திடுக்கிட்டு, “தாங்கள் கூறுவதை நன்கு சிந்தித்துக் கூறுங்கள். இச்செய்தியை தங்களுடைய பொறுப்பின் மீது நாங்கள் அரசருக்கு அறிவிக்கின்றோம். அதனால் உண்டாகும் விளைவை, நீங்கள் அனுபவிக்க வேண்டியதிருக்கும். ஏனெனில், எந்தக் குற்றத்துக்காக நாங்கள் தங்களைக் கொண்டு போக வந்திருக்கிறோமோ, அதைக் காட்டிலும், தாங்கள் இப்பொழுது சொல்வது மிகப் பெரிதாக இருக்கின்றதே” என்று சொன்னார்கள்.

அப்பொழுது பெருமானார் அவர்கள், “என்னுடைய பொறுப்பிலேயே இச்செய்தியை நீங்கள் தெரிவிக்கலாம். அத்துடன் 'இஸ்லாத்தின் ஆட்சியானது, உங்கள் அரசரின் சிம்மாசனத்தின் அஸ்திவாரம் வரை வந்து சேரும்' என்றும் தெரிவியுங்கள்," என்று கூறினார்கள்.

தூதர்கள் இருவரும் ஏமனுக்குத் திரும்பி வந்து, ஆட்சித் தலைவரிடம் செய்தியைச் சொன்னார்கள்.

அதைக் கேட்டதும் அவர் வியப்படைந்தார். “இச்செய்தி உண்மையாயிருக்குமானால், அவர்கள் நபிகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஏனெனில், இந்தச் செய்தியை வெகு தொலைவில் இருந்து அறிந்து அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

சில நாட்களுக்குப் பிறகு, பெருமானார் அவர்கள் கூறியது உண்மை என்பது தெரிய வந்தது.

அரசர் கொல்லப்பட்டு அவருடைய மகன் ஆட்சியை ஏற்றிருக்கிறார் என்ற அறிக்கை ஆளுநருக்குக் கிடைத்தது.