பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192



பொருள்களுடையவும் நன்மையையே உன்னிடத்தில் வேண்டுகிறோம். இன்னும், இவை எல்லாவற்றின் தீங்கை விலக்கி, உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்” எனப் பெருமானார் அவர்கள் வேண்டுதல் செய்தார்கள்.

பெருமானார் அவர்கள் ஒவ்வொரு ஊருக்குள் நுழையும் முன்பு இவ்வாறு பிரார்த்தனை செய்வது வழக்கமாயிருந்தது.

இரவு நேரத்தில் பெருமானார், அவர்கள் பகைவர்களைத் தாக்குவது இல்லை; ஆதலால், அன்று இரவு அங்கே தங்கிவிட்டுக் காலையில் கைபருக்குள் நுழைந்தார்கள்.

யூதர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பாதுகாப்பான ஒரு கோட்டையிலும், தானியங்களையும், சண்டைக்கு வேண்டிய தளவாடங்களையும் ஒரு கோட்டையிலும், படைகளை இரண்டு கோட்டைகளிலும் வைத்திருந்தார்கள்.

அதிகாலையில், யூதர்களின் கோட்டைகளைத் தாக்கினார்கள். அவர்களுடைய கோட்டைகள் ஒவ்வொன்றாக முஸ்லிம்கள் வசமாயின. இருபது நாட்கள் மிக உக்கிரமாக முற்றுகையிட்டதின் பின்னர் வெற்றி பெற முடிந்தது.

யூதர்கள் உறுதியான கோட்டைக்குள் இருபதினாயிரம் வீரர்கள் இருந்தும் அவர்கள் தோற்று விட்டனர். அதற்குக் காரணம் என்ன என்பதே கேள்வி.

தாங்கள் கோட்டைக்குள் இருப்பதால், முஸ்லிம்களால் தங்களை எதுவும் செய்ய இயலாது என மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள் யூதர்கள்.

முஸ்லிம்களின் திடீர்த் தாக்குதலாலும், கோட்டைக்குள் இருந்து கொண்டே சண்டையிட வேண்டியிருந்ததாலும், தண்ணீர்த் தட்டுப்பட்டாலும் யூதர்கள் திண்டாட வேண்டியதாயிற்று.

கத்பான் கூட்டத்தாரின் வெளி உதவி எதிர்பார்த்தபடி அவர்களுக்குக் கிடைக்கவில்லை.