பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202



பின்னர், அபூ ஸுப்யான் மக்காவுக்குச் சென்று நடந்தவற்றைக் குறைஷிகளிடம் விவரமாகக் கூறினார்.

அதைக் கேட்ட குறைஷிகள், அபூ ஸுப்யானிடம், “நீர் சமாதான உடன்பாடு செய்து கொண்டு வரவும் இல்லை; அப்படியானால், நாம் ஆறுதல் அடைந்திருக்கலாம். அல்லது சண்டைக்கான முடிவும் செய்து வரவில்லை. அவ்வாறானால், சண்டைக்காவது நாம் தயாராகலாம்” என்று கூறி கலக்கத்தோடு இருந்தனர்.


151. குற்றமும் மன்னிப்பும்

உடன்படிக்கையை மீறி அநியாயம் செய்து வரும் மக்காவாசிகள் மீது படையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முஸ்லிம்களுக்கு நட்பாயுள்ள மற்ற கூட்டத்தாருக்கும் படையில் கலந்து கொள்ளுமாறு, பெருமானார் இரகசியமாகச் செய்தி அனுப்பினார்கள்.

ஆனால், படை எங்கே செல்கிறது? எதற்காகச் செல்கிறது? என்ற செய்தி எவருக்கும் தெரியாது. மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்கும் பொருட்டு, தகுந்த ஏற்பாடுகளைப் பெருமானார் அவர்கள் செய்திருந்தார்கள்.

இதற்கிடையே, ஹாதிப் என்னும் முஸ்லிம், மக்காப் படையெடுப்புக்காக ஏற்பாடாகிறது என்பதை எப்படியோ தெரிந்து கொண்டார். உடனே, இரகசியமாகக் குறைஷிகளுக்கு ஒரு கடிதம் எழுதி, ஒரு பெண் மூலம் மக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

ஹாதிப் கடிதம் அனுப்பிய செய்தி, பெருமானார் அவர்களுக்கு இறையருளால் அறிவிக்கப்பட்டது.

உடனே பெருமானார் அவர்கள், அலி அவர்களை அனுப்பி, அந்தப் பெண்ணிடமிருக்கும் கடிதத்தைக் கைப்பற்றி வருமாறு கட்டளையிட்டார்கள்.

அந்தப் பெண்ணின் கூந்தலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் கைப்பற்றிக் கொண்டு வரப்பட்டு, பெருமானார் அவர்கள் முன்னே வைக்கப்பட்டது.