பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203



ஹாதிபை அழைத்துப் பெருமானார் அவர்கள் விசாரித்த போது, தம் நெருங்கிய உறவினர்கள் எவ்வித ஆதரவும் இல்லாமல், மக்காவில் இருப்பதால், அவர்களுக்குக் குறைஷிகளால் தீங்கு நேரிடாமல் இருப்பதற்காகக் குறைஷிகளுக்கு உதவி செய்ய விட வேண்டும் என்று கருதி, கடிதத்தை அனுப்பியதாகக் கூறி, தம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

“உத்தரவு கொடுத்தால், இந்தப் பாதகனின் தலையைத் துண்டித்து விடுவேன்” என ஆவேசப்பட்டார் உமர் அவர்கள்.

ஹாதிப் ஒரு முக்கியமான முஸ்லிம் தோழர். பத்ருப் போரில் கலந்து கொண்டவர்.

பெருமானார் அவர்கள், உமர் அவர்களிடம், “தோழரே, பத்ருச் சண்டையில் ஈடுபட்டவர்கள் செய்யும் பாவங்களை ஆண்டவன் மன்னித்து விட்டான்” என்று கூறி, ஹாதிபை மன்னித்து விட்டார்கள்.


152. படை திரண்டு மக்காவை நெருங்குதல்

மக்காவுக்குப் போகும் வழியில், அரபிக் கூட்டத்தாரில் பலர், பெருமானார் அவர்களின் படையோடு ஆங்காங்கே சேர்ந்து கொண்டார்கள்,

மக்காவுக்குச் சிறிது தூரத்தில் இருந்த மர்ருஸ் ஸஹ்ரான் என்னும் இடத்தில், முஸ்லிம் படையினர் முகாம் இட்டனர்.

அந்த இடத்துக்கு அருகில் இருந்த மேட்டில், ஒவ்வொருவரும் தனித்தனியாக, அடுப்பு மூட்டிச் சமையல் செய்யுமாறு பெருமானார் அவர்கள் படையினருக்குக் கட்டளையிட்டார்கள்.

அவ்வாறே படைவீரர்கள் பதினாயிரம் அடுப்புகளை மூட்டி, சமையல் செய்ய முற்பட்டார்கள். அதனால் அந்த வட்டாரம் முழுவதும் ஒரே ஒளிமயமாய் இருந்தது.

இதனால் முஸ்லிம்களின் படைபலத்தைக் கண்டு கலங்கி, எதிர்க்காமல் மக்காவுக்குள் குறைஷிகள், தங்களை விட்டு