பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207



அபூ ஸுப்யான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அபூ ஸுப்யானை மேட்டில் நிறுத்தி, தங்களுடைய சேனையின் பல பிரிவுகளையும் பார்க்கச் செய்யுமாறு, ஹலரத் அப்பாஸிடம் பெருமானார் (ஸல்) சொன்னார்கள்.

சேனையின் பிரிவுகளையும் காட்டி, அவர்கள் எந்தக் கூட்டத்தினர், அவர்களுக்குத் தளபதிகள் யார் என்பதையும் அபூ ஸுப்யானுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

வியப்பு மேலிட்ட அபூ ஸுப்யான், “உண்மையாகவே, உங்களுடைய சகோதரர் குமாரருடைய அரசாங்கம் வலிமையுடையது" என்றார்.

“அது அவர்கள் நபியாக இருப்பதன் காரணத்தால் ஏற்பட்டது” என்றார்கள் அப்பாஸ் (ரலி)


156. மக்காவாசிகளுக்கு முன்னெச்சரிக்கை

பெருமானார் அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து சென்றார்கள். பாதுகாப்புக்காக, அவர்களைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் சூழ்ந்திருந்தார்கள்.

மக்காவுக்கு அருகில் சேனை வந்து சேர்ந்தது.

பெருமானார் அவர்களின் முன்னே வந்து, “எனக்கு உத்தரவு கொடுத்தால், முன் கூட்டியே நான் மக்காவுக்குச் சென்று, முஸ்லிம்களின் வருகையையும், குறைஷிகள் வீண் பிடிவாதத்தினால் தடுக்காமல் இருக்கும்படியும், அவர்களிடம் அறிவித்து விடுகிறேன்” என்றார் அபூ ஸுப்யான்.

நாயகப் பெருந்தகையும் அதற்குச் சம்மதித்தார்கள்.

அபூ ஸுப்யான் விரைவாக மக்காவுக்குச் சென்றார்.

முக்கியமான செய்தியை அறிவிக்கத் தங்கள் தளபதி வந்திருப்பதாகக் குறைஷிகள் ஆவலோடு அவரைச் சூழ்ந்து கொண்டனர்.