பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

213



உளளத்தை நன்கு அறிந்தவர்கள். ஆதலால், பெருமானார் அவர்களைப் பார்த்து, “கருணைமிக்க சகோதர கருணை உள்ள சகோதரர் குமாரரே! நீங்கள் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்வீர்கள்” என்று கூறினார்கள்.

அவர்கள் கூறிய சொற்கள், பெருமானாரின் உள்ளத்தை நெகிழச் செய்து, கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

பெருமானார் அவர்கள், அந்த மக்களை நோக்கி, “யூஸுப் நபி அவர்கள், தங்கள் சகோதரர்களிடம் தெரிவித்தது போலவே, நான் உங்களிடம் கூறுகிறேன். இன்று உங்களைக் குற்றவாளிகளாகக் கருத மாட்டேன். நாயன் உங்களை மன்னிக்கட்டும். இரக்கமுள்ளவர்களில் எல்லாம் அவனே மிகுந்த இரக்கமுள்ளவன். நீங்கள் செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.

பெருமானார் அவர்களின் உத்தமக் குணச் சிறப்பைக் கண்டு மக்கள் அனைவரும் உள்ளம் நெகிழ்ந்தார்கள்.


161. கொடியவர்களுக்கும் மன்னிப்பு அளித்தல்

முஸ்லிம் சேனையானது மக்காவுக்குள் நுழைந்ததும், மக்காவாசிகளில் சிலர், தாங்கள் முன்பு முஸ்லிம்களுக்கு இழைத்த தீங்குகளுக்காக, அவர்கள் தங்களைப் பழி வாங்கக் கூடும் என்று பயந்து மக்காவை விட்டே ஓடி விட்டார்கள். அவர்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டனர்.

அபூஜஹிலின் மகன் இக்ரிமாவும், அவ்வாறு ஓடியவர்களில் ஒருவர். அவர் மக்காவை விட்டு ஒடியதும் அவருடைய மனைவி உம்மு ஹகீம் பெருமானார் அவர்களிடம் வந்து, “ஆண்டவனுடைய தூதரே! இக்ரிமாவைக் கொல்லும்படி நீங்கள் கட்டளையிடுவீர்களோ என்ற அச்சத்தால், அவர் ஏமனுக்கு ஓடி விட்டார். அவரை மன்னிக்கும்படி தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மன்னித்து விட்டதாகப் பெருமானார் கூறினார்கள்.