பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

227



அறிகுறியாக சூரிய கிரஹணம் உண்டாகும் என்பது அரேபியர்களின் கொள்கை.

குழந்தை இப்ராஹிம் அவர்களின் மரணத்திற்காகவே, சூரிய கிரஹணம் உண்டானதாக, மக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பெருமானார் அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்ததும், அவர்களை எல்லாம் அழைத்து, “ஒருவர் இறந்ததற்காகவாவது அல்லது உயிருடன் இருப்பதற்காகவாவது சூரிய-சந்திர கிரஹணங்கள் உண்டானதில்லை. கிரஹணத்தைக் கண்டால், நீங்கள் தொழுது ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறி, கூட்டமாக ஒன்று சேர்ந்து கிரஹணத் தொழுகை நடத்தினார்கள்.

இவ்வாண்டு பெருமானார் அவர்களின் மகள் ஸைனப் அவர்கள் உயிர் துறந்தனர்.


175. மதீனாவைத் தாக்க ஏற்பாடு

மக்காவின் வெற்றிக்குப் பின், அரபியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு, கிறிஸ்துவர் ஆட்சி புரியும் ரோமாபுரி அரசுக்குப் பொறாமை உண்டாயிற்று.

இன்னும் சிறிது காலத்திற்குள், அரேபியா முழுவதிலுமே இஸ்லாம் பரவி விடும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். அதனால் முன் கூட்டியே அதை நசுக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஆகையால், மதீனாவைத் தாக்குவதற்கு முன்னேற்பாடு செய்தனர்.

ஷாம் மாகாணத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கஸ்ஸான் என்னும் கூட்டத்திலுள்ள சிறறரசன் ஒருவன் அதில் முக்கியமானவனாக இருந்தான்.

மதீனாவைத் தாக்குவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யுமாறு சிற்றரசனுக்கு ரோமாபுரி அரசு கட்டளையிட்டிருந்தது. அவனும் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தான்.