பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

233



ஆனால், முஸ்லிம் அல்லாதவர்கள், ஹஜ் காலங்களில் கஃபாவுக்கு வந்து, தங்களுடைய பழமையான நாகரிகமற்ற சடங்குகளை நிறைவேற்றி வருவது மட்டும் நிற்கவில்லை. மேலும், அவர்கள் நிர்வாணமாக கஃபாவைச் சுற்றி வந்து, பாவகரமான பல செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

கஃபாவைத் தூய்மைப் படுத்தியதோடு, ஹஜ் சடங்குகளை ஹலரத் இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்தில் இருந்தது போல் நடத்த வேண்டும் என்று பெருமானார் அவர்கள் எண்ணினார்கள். இவ்வருடம் முஸ்லிம்களில் முந்நூறு பேரை, பெருமானார் அவர்கள் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு அனுப்பினார்கள்.

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை ஹஜ் யாத்திரைக் குழுவுக்குத் தலைவராக நியமித்தார்கள்.

மக்காவில் வந்து கூடுகின்ற மக்களுக்கு இஸ்லாமிய நெறிமுறைகளைப் போதிப்பதற்காக, அலி (ரலி) அவர்களையும் பெருமானார் அவர்கள் அனுப்பியதோடு, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காகவும் சிலரை அனுப்பி வைத்தார்கள்.


182. உடன்படிக்கை விளம்பரப்படுத்துதல்

முஸ்லிம்கள் மக்காவுக்கு வந்து ஹலரத் இப்ராஹிம் நபியவர்களின் முறைப்படி, ஹஜ்ஜைச் சிறப்பாக நிறைவேற்றினார்கள்.

இவ்வருடத்திய ஹஜ், திருக்குர் ஆனில் 'பெரிய யாத்திரை' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அபூபக்கர் அவர்கள் பெருமானார் அவர்களின் கட்டளைப்படி, அங்கே கூடியிருந்த மக்களுக்கு ஹஜ் செய்ய வேண்டிய முறைகளை அறிவுறுத்தினார்கள்.

அதன் பின், அலி அவர்கள் எழுந்து நின்று, திருக்குர் ஆனில் “பராஅத்” என்னும் ஒன்பதாம் அதிகாரத்திலுள்ள நாற்பது ஆயத்துகளை ஒதினார்கள். பிறகு, கீழ்க்கண்ட அறிக்கையை விளம்பரப்படுத்தினார்கள்.