பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234


  1. விக்கிரக ஆராதனைக்காரர்கள், இவ்வருடத்துக்குப் பின் கஃபாவுக்குள் நுழையக் கூடாது.
  2. நிர்வாணமாக எவரும் கஃபாவை வலம் வரக் கூடாது.
  3. விக்கிரக ஆராதனைக்காரர்களுடன் பெருமானார் அவர்கள் முன்பு செய்து கொண்டிருந்த உடன்படிக்கையின்படி, அந்த நிபந்தனைகளுக்கு மாறாக அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு விரோதமாக இருப்பவர்களும் உதவி செய்யாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், உடன்படிக்கையில் குறிப்பிட்டிருக்கும் காலம் வரை அது அமுலில் இருக்கும்.
  4. இதுவரை யாருடன் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நான்கு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அவர்களைக் காப்பாற்ற ஆண்டவனுக்கும், அவனுடைய நபிக்கும் பொறுப்பில்லை.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின், சிறிது காலத்துக்குள் மீதியிருந்த எல்லோரும் முஸ்லிம்களாகி விட்டார்கள்.

நாட்டின் நிலைமை சீராகி, சமாதானம் ஆகி விட்டதால், மக்களிடமிருந்து இவ்வருடம் தரும வரி வசூல் செய்யும்படி கட்டளை பிறந்தது.

தருமவரி வசூலிப்பதற்காக, அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

ஹபஷி நாட்டு அரசர் நஜ்ஜாஷி, முஸ்லிம்களுக்கு முன்பு உதவி புரிந்தவர். அவர் இவ்வருடம் உயிர் துறந்தார். அவருடைய மரணத்தைப் பற்றிப் பெருமானார் அவர்கள் மக்களுக்கு முதலாவதாக அறிவித்தார்கள். “முஸ்லிம்களே! தர்ம சீலரான உங்களுடைய சகோதரர் காலமாகி விட்டார். அவருடைய பாவங்களை மன்னிக்கும்படி ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறி, அவருக்காகப் பெருமானார் அவர்கள் மரணப் பிரார்த்தனை செய்தார்கள்.