பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236



நிலைமை எவ்வாறு ஆகும் என்பதைச் சுற்றுப் புறங்களிலுள்ள பல கூட்டத்தார் எதிர்vபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஹஜ் காலத்தில், பெருமானார் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பல கூட்டத்தாரிடம் போதனை செய்யும் போது, “உங்களுடைய சமூகத்தாரான குறைஷிகளே, உங்களை அங்கீகரிக்காத போது, நாங்கள் எப்படி உங்களை ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று சொல்லி விடுவார்கள் அவர்கள்.

மக்காவை வெற்றி கொண்ட பிறகு, குறைஷிகள் இஸ்லாத்தைத் தழுவியதை அரேபியர்கள் அறிந்தார்கள். இஸ்லாத்தின் சிறப்பை உணர்ந்த அவர்கள் அணியணியாக வந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

குறைஷிகளும், யூதர்களுமே இஸ்லாத்துக்குப் பகைவர்களானவர்கள்.

மக்காவை வெற்றி கொண்ட பின்னர், குறைஷிகள் அடங்கி விட்டனர். கைபர் சண்டைக்குப் பின்னர், யூதர்களின் ஆரவாரமும் ஒய்ந்தது.

ஹிஜ்ரி எட்டு, ஒன்பது, பத்தாவது ஆண்டுகளில் இஸ்லாம் ஹிஜாஸ் மாகாணத்தைக் கடந்து ஒரு பக்கம் ஏமன், பஹ்ரைன், யமாமா வரையிலும், மற்றொரு பக்கம் இராக், ஷாம் வரையிலும் நன்கு பரவிவிட்டது.


185. பெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை

முன்பு முஸ்லிம் மதப் பிரச்சாரகர்களுக்கு அரபிக் கூட்டத்தார் இடையூறு உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்யச் சென்ற பல பிரச்சாரகர்கள் அரேபியர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மக்காவை வெற்றி கொண்ட பின், அந்தப் பயமானது அறவே நீங்கி விட்டது. அதன் பின், பெருமானார் அவர்கள் அரேபியாவின் பல பகுதிகளுக்கும் இஸ்லாமியப் பிரச்சாரகர்களை அனுப்பினார்கள்.