பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238



“நீங்கள் சாந்தமாகப் பணி செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யக் கூடாது. மக்களுக்குச் சிறந்த கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்; அவர்களுக்கு வெறுப்பு உண்டாகுமாறு நடக்கக் கூடாது. நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். வேறு மதத்தவர்களையும் நீங்கள் அங்கே சந்திக்கக் கூடும். அவர்களைக் காண்பீர்களானால், முதலாவதாக, ஆண்டவன் ஒருவன் என்பதையும், நான் அவனுடைய தூதன் என்பதையும், நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்கள் அவற்றை ஒப்புக் கொண்டால், “இரவிலும் பகலிலும் ஐந்து நேரத் தொழுகையை ஆண்டவன் உங்கள் மீது கடமையாக்கி இருக்கிறான்” என்று கூறுங்கள். அவர்கள் அதை அங்கீகரித்த பின், “தருமம் செய்ய வேண்டியது உங்கள் மீது கடமையாயிருக்கும். உங்களில் செல்வர்களிடமிருந்து நிதி வசூலித்து, ஏழைகளுக்குக் கொடுக்கப்படும்” என்று சொல்லுங்கள். எவரையும் கொடுமைப் படுத்தாதீர்கள். ஏனெனில் கொடுமைப் படுத்தப்பட்டோர் பிரார்த்தனைக்கும், ஆண்டவனுக்கும் மத்தியில் திரை ஒன்றும் இல்லை.”


186. நேரில் வந்து கண்டு மகிழ்ந்தனர்

பெருமானார் அவர்களுடைய கட்டளைகளை சிரமேற் கொண்டு, முஸ்லிம் பிரச்சாரகர்கள் பல பகுதிகளுக்கும் சென்று, இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்து வந்தார்கள்.

அவர்களுடைய போதனையால் பல கூட்டத்தார் ஆங்காங்கே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

அக்கூட்டத்தினர் இஸ்லாத்தில் சேர்ந்ததோடு, தாங்கள் இஸ்லாத்தில் சேர்ந்திருப்பதை அறிவிப்பதற்காக வேண்டிக் கூட்டம் கூட்டமாகப் பெருமானார் அவர்களிடம் தூது வந்தார்கள்.

சில கூட்டத்தாருக்கு, இஸ்லாத்தின் மீது ஆரம்பத்திலிருந்த வெறுப்பும், பகைமையும் நீங்கியது. பெருமானார் அவர்களின் வாயிலாக, நேரில் இஸ்லாத்தின் சிறப்பை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவுடன் மதீனாவுக்கு வந்தார்கள். பெருமானார்