பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241



பின்னர் நாயகம் (ஸல்). அவர்களுக்கு விலையுயர்ந்த அன்பளிப்புகளை வழங்கினார்கள்.


188. சந்தேகம் தெளிதல்

பனூ ஸஃது என்னும் முக்கியமான கோத்திரத்தார் தங்களுடைய பிரதிநிதியாக, லிமாமுப்னு தஃலபா என்பவரைப் பெருமானார் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

லிமாம் மதீனாவிலுள்ள பள்ளிவாசலுக்கு வந்து, அங்கு கூடியிருந்தவர்களிடம், “உங்களில் யார் அப்துல் முத்தலிப் வம்சத்தவர்?”, என்று கேட்டார்.

அங்கு இருந்தவர்கள், பெருமானார் அவர்களைச் சுட்டிக் காட்டினார்கள்.

பெருமானார் அவர்கள் முன்னே அவர் வந்து, “நான் உங்களிடம் கடுமையானதொரு கேள்வி கேட்பேன். அதைத் தாங்கள் தவறாக எண்ணக் கூடாது” என்று கூறினார்.

அதற்குப் பெருமானார் அவர்கள், “அவ்வாறு எண்ண மாட்டேன். கேளும்” என்றார்கள்.

அவர், “உலகம் முழுவதற்கும் உங்களை நபியாக ஆண்டவன் அனுப்பியிருக்கிறான் என்பதை ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்ல முடியுமோ?” என்று கேட்டார்.

பெருமானார் அவர்கள் “ஆம்” என்றார்கள்.

அதன்பின் லிமாம், "ஐந்து நேரம் தொழ வேண்டும் என்று ஆண்டவன் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறானோ?” என்று கேட்டார்.

அதற்கும் பெருமானார் அவர்கள் “ஆம்” என்றார்கள்.

அதைப் போலவே,நோன்பு, ஜகாத், ஹஜ் சம்பந்தமாகவும் லிமாம் கேட்டார்.

பெருமானார் அவர்கள், கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விடையாக 'ஆம்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

17