பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244


கடைசியாக, அவர்கள் கூடி ஆலோசித்தார்கள். பெருமானார். அவர்களிடம் ஒரு தூதுக் குழுவை அனுப்பத் தீர்மானித்தனர்.

தகீப் கூட்டத்தாரின் தூதர்கள் மதீனாவுக்கு மிக அருகில் வந்து விட்டதாக அறிந்ததும், முஸ்லிம்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நற்செய்தியைப் பெருமானார் அவர்களிடம் தெரிவிக்கப் பலர் ஓடினார்கள். அப்பொழுது, அபூபக்கர் அவர்கள் “மகிழ்ச்சிக்கு உரிய இந்தச் செய்தியை, நானே பெருமானார் அவர்களிடம் சென்று தெரிவிப்பேன்” என்றார்கள்.

தகீப் கூட்டத்தின் தூதர்கள், மதீனாவின் பள்ளிவாசல் முற்றத்தின் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள்.

பெருமானார் அவர்கள், அக்கூட்டத்தாரிடையே சென்று இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்தார்கள். சில நாட்கள் வரை அவர்கள் அங்கேயே தங்கினார்கள்.

பெருமானார் அவர்களின் போதனைக்குப் பிறகு, அக்கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவ விருப்பப்பட்டார்கள். ஆனால், சில விஷயங்களில் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது; தங்களுக்குச் சுய உரிமை வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் கூறிய நிபந்தனைகளாவன :

  1. எங்களில் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே காலம் கழிப்பதால், நாங்கள் பிற பெண்களிடம் தொடர்பு கொள்வதைத் தடுக்கக் கூடாது.
  2. எங்களுக்கு முக்கியமான தொழில், பணம் வட்டிக்குக் கொடுத்து வாங்குதல்; ஆகையால், வட்டி வாங்குவதைத் தடுக்கக் கூடாது.
  3. எங்களுடைய நாட்டில், திராட்சைப்பழம் அதிகமாய் உற்பத்தியாவதால், எங்களுக்கு முக்கியமான தொழில் மது தயாரித்து விற்பது; அதையும் தடுக்கக் கூடாது.

மேற்காணும் மூன்று நிபந்தனைகளையும் பெருமானார் அவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார்கள்.