பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248



உடனே ஆமிர், அர்பதைக் கூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான்.

அப்போது, பெருமானார் அவர்கள், “ஆண்டவனே! இவர்களுடைய தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்று” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

வழியில், ஆமிருக்குக் கழுத்தில் நெறி கட்டி, “பிளேக்” போன்ற நோய் வந்தது.

குதிரை மீது தன்னைத் தூக்கி வைக்கும்படி தன் கூட்டத்தாரிடம் சொன்னான். குதிரை மீது நெடுந்தொலைவு போக முடியவில்லை. பனூ ஸலுல் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் அவனை இறக்கினார்கள். அங்கேயே அவன் இறந்தான்.

அவனுடன் வந்தவர்கள் எல்லோரும் இஸ்லாத்தைத் தழுவி, தங்கள் நகருக்குப் புறப்பட்டார்கள்.


193. “இரக்கம் உள்ளவர்களை ஆண்டவன் நேசிக்கிறான்”

தய்யி என்னும் பெயருடைய ஒரு கூட்டத்தினர், ஏமன் தேசத்தில் செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் தூண்டுதலால், இஸ்லாத்துக்கு விரோதமாகக் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

அந்தக் குழப்பத்தை அடக்குவதற்காகப் பெருமானார் அவர்கள், அலி அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அங்கே அனுப்பி வைத்தார்கள்.

அப்பொழுது அதீ என்ற கிறிஸ்தவர் அக்கூட்டத்தாருக்குத் தலைவராக இருந்தார். அவர் ஒரு சிற்றரசர் போலவே இருந்தார். அவருடைய தந்தை ஹாத்திம் என்பவர். தயாள சிந்தை உள்ளவர். கொடை வள்ளல் என்று பெயர் பெற்றவர். கொடைக்கு ஓர் உவமானமாக மக்களிடையே சொல்லப்படுபவர்.