பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250



இரக்கமுள்ளவர்களை நேசிக்கிறான். அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறான்” என்று சொன்னார்கள்.

ஸஃப்பானா விடுவிக்கப்பட்டாள். அவள் பெருமானார் அவர்களிடம், “என் குடும்பத்தினரும், என்னைச் சேர்ந்தவர்களும் சிறைபட்டிருப்பதனால், நானும் சிறையில் இருப்பதே முறை. அவர்களைக் கொல்வதற்கு உத்தரவிடுவதானால், முதலில் என்னை வெட்டும் படி உத்தரவிடுங்கள். அவர்கள் எல்லோரும் இறந்து போய், நான் மட்டும் உயிரோடு இருக்கவும் விரும்பவில்லை” என்று பணிவோடு கூறினாள்.

அதைக் கேட்டதும் பெருமானார் அவர்கள், அந்தக் கூட்டத்தார் எல்லோரையும் விடுவித்து, அவர்களுக்குப் போதிய பொருள் கொடுத்து அவர்களைக் கெளரவமாக அனுப்பி வைக்கும்படி கட்டளையிட்டார்கள்.

ஸஃப்பானாவும், அவள் குடும்பத்தினரும் ஊருக்குத் திரும்பினார்கள்.

ஸஃப்பானா தன் சகோதரன் அதீயைத் தேடி, ஷாம் தேசத்துக்குச் சென்றாள். அங்கே அவரைக் கண்டு, “பெருமானார் அவர்கள் முன்னிலையில், நீர் கூடிய விரைவில் செல்ல வேண்டும். நபி என்ற முறையிலும், அரசர் என்ற முறையிலும் எந்த நிலையிலும் அவர்களைக் காண்பது நன்மை தரும்.” என்று கூறியதோடு நடந்தவற்றையும், பெருமானார் அவர்களின் சிறப்பு மிக்க குணங்களையும் விவரமாகக் கூறினாள்.

தன் சகோதரி கூறியதைக் கேட்ட அதீ, அவளையும் உடன் அழைத்துக் கொண்டு, உடனே மதீனாவுக்குப் போய், பெருமானார் அவர்களைக் கண்டு இஸ்லாத்தைத் தழுவினார்.

அதீயின் முயற்சியினால் பிறகு அவருடைய கூட்டத்தார்களும் முஸ்லிம் ஆனார்கள்.